போரின் புதிய முகங்கள்: வே. தொல்காப்பியன்

நேற்று இத்தளத்தில் வெளியான ‘தனிமைக்கு எதிராக எழுதுதல்‘ மொழிபெயர்ப்புப் பற்றி வந்த மின்னஞ்சல் கீழே. வே. தொல்காப்பியன் அவர்கள் எழுதியது. கூடவே தனது தளத்தில் எழுதிய பதிவொன்றையும் பகிர்ந்திருந்தார். உலக அமைதி குறித்து அக்கறை கொண்டுள்ள எல்லோரும் சிந்தையில் பதிக்க வேண்டிய முக்கியமான கருத்துகள் சிலவற்றை அதில் முன்வைத்திருந்தார். அப்பதிவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளைக் கீழே தந்திருக்கிறேன். முழுமையான பதிவைப் படிப்பதற்கான இணைப்பும் முடிவில் தரப்பட்டுள்ளது.

அன்புள்ள ஐயா,

வணக்கம்.

மொழிபெயர்ப்பு கடினமான பணி. முற்போக்கு, இடதுசாரி சிந்தனையாளர்களின் ஆக்கத்தை படிக்கச் சுவையாக சுலபமாக இருக்கும் வண்ணம் மொழிபெயர்த்தல் அதிலும் சிக்கலானது. நல்ல முயற்சி.

அன்புள்ள,
வே.தொல்

‘தொல்தமிழ்’ வலைப்பதிவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்:

நேருக்கு நேர் நின்று ஏறத்தாழ சமவலிமை, வாய்ப்புடன் நடந்த‌ போர் வீரம் போற்றப்பட்ட பழம் காலம் வேறு. இன்று நடக்கும் பொத்தானை அழுத்திக் குண்டு மழை பெய்து, ஏவுகணைகளை ஏவி நடக்கும் கோழைப் போர் வேறு. 

இன்று அது மிக வேகமாக அதிகரித்துள்ளது. ஆளில்லா விமானங்களை ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து இயக்கிக் கொன்று குவித்து விட்டு உடலில் தூசி கூடப் படாமல் வழக்கம் போல் உண்டு உறங்கி எழுந்து மீண்டும் எந்த ஆபத்தும் இல்லாமல் பொத்தனை அழுத்தி பொசுக்கித் தள்ளலாம்.

வேட்டையாடி விலங்கைக் கொல்லும் ஆப்பிரிக்கப் புதர்ப் பழங்குடியினர் முதலில் இறந்த விலங்கு தங்களை வாழ்விக்கப் போவதற்காக அதனிடம் மன்னிப்பைக் கோரிச் சிறு சடங்கு நடத்துகிறார்கள். அதற்கும் வீட்டில் வளரும் கோழி, ஆடு, பன்றி, மாட்டைக் கொன்று தின்பதற்கும் இன்று பண்ணைகளில் வளர்க்கப் பட்டுத் தொழிற்சாலைகளில் இயந்திரங்களால் கொல்லப் பட்டு வரும் இறைச்சியைத் தின்பற்கும் உள்ள வேறுபாடு எவ்வளவு?


அதுபோல் போரும் இயந்திர மயமாகி (industrialized) மனசாட்சியைப் புதைத்து விட்டது. வீரத்திற்கு வேலை இல்லாமல் செய்து விட்டது. வீரம் போனதால் விவேகமும் போய் விட்டது.
அடுத்த கட்டம் (ஏற்கனவே பகுதியளவு நடந்து கொண்டுள்ளது) தானியங்கி இயந்திரமயமாகுதல் (ரோபாட்) தான்.


தற்போது ரோபாட்டைப் பயன்படுத்தி நடக்கும் தாக்குதல்கள் பாராளுமன்ற விவாதத்திற்கு ஒப்புதலுக்கு வருவதே இல்லை. இதுதான் வருங்காலத்தில் மேலும் மேலும் நடக்கும். போர் என்றாலே பொய்ப் பிரச்சாரம் (எல்லாப் பக்கங்களுக்கும்) நடக்கும் என்பது போக, போரே நடக்குதா நடக்கவில்லையா என்று தெரியாமல் போனாலும் போகலாம். இதுவும் ஏற்கனவே நடந்து வருகின்றது.

அது மட்டுமல்லாது இன்று போரை அறிவிப்பவர்கள் யாரும் போர்க்களத்தில் நின்று போர்  செய்வதில்லை என்பதால் அவர்களுக்குத் தனிப்பட்ட ஆபத்து இல்லை. They don’t have their skin in the game. ஊரான் வீட்டுக் காசில் பங்குச் சந்தையில் புகுந்து விளையாடுவது (investment bankers) போல் தான்.

ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், அதன் பங்கு விற்பனைகள் என்று போர் நாட்டைப் பாதுகாக்க, உரிமைக்காக நடந்தது போக அந்தப் போர்வையில் போருக்காக போர் நடக்கிறது.

விளையாட்டு (sports) என்பது எப்படி ஒரு வணிகமயமாகி வீணாகி விட்டதோ அதை விட மோசமாகப் போர் என்பது புரையோடிய‌ அயோக்கியத் தொழில் வணிகமாகி விட்டது.

முழுமையான பதிவு இங்கே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×