‘வெற்றிக்கழகம்’: தொகைச்சொல்லை எவ்வாறு எழுத வேண்டும்?


தொடர்புடைய முன்னைய பதிவைப் படிக்க: இங்கே செல்க


‘வெற்றிக்கழகம்’ பெயரில் இருந்த ஒற்றுப்பிழை சரி செய்யப்பட்டுள்ளதை வரவேற்று முகநூலில் எழுதிய பதிவின் கீழ் இன்று ஒருவர் கேட்ட்டார்:

வெற்றிக் கழகம் என்பதை ‘வெற்றிக்கழகம்’ என்று சேர்த்து எழுத வேண்டுமா?

நான் கீழ்க்கண்டவாறு விடையிறுத்தியிருந்தேன்:

இது தொடர்பாக வேறுபட்ட பார்வைகள் உள்ளன.

தமிழ் முதன்மையாக ஒலிப்பில் கவனம் செலுத்தும் மொழி.

ஒலிக்கும் தமிழ் செவிப்புலனுக்கானது. எழுதப்படும் தமிழ் கட்புலன் வழி மனம் புகுவது.

எழுதப்படும்போது எங்கே இடைவெளி விடவேண்டும் என்பது தொடர்பான நடைமுறைகள் இக்காலத்தில் – அச்சு யந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிற்பாடு – எழுந்தவை என்று எண்ணுகிறேன்.

முற்காலத்தில் இட நெருக்கடி காரணமாக ஓசைச்சுவடிகளில் எல்லாத் தொடர்களும் புணர்த்தித் தொடுத்தே எழுதப்பட்டன.

எழுத்துத்தமிழ் பண்டைக்காலத்தில் உரை நடையை விட அதிகமும் யாப்பின்பாற்பட்டே இயங்கியது. யாப்பில் ஓசைக்கே முதன்மை. சீரின் ஓசைக்காக ஒரு சொல்லை இரு துண்டங்களாகப் பிளப்பதை வகையுளி எனச்சொல்லி இயலுமானவரை தவிர்க்கத் தூண்டினர் எனினும், தேவையானபோது செய்யுளில் சொல் இரண்டாகப் பிளக்கப்படுவதும் உண்டு:

‘மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்’.

‘ நீடுவாழ் வார்’ : சொல்லின் இறுதி நிலை, யாப்போசைக்காகத் துண்டிக்கப்பட்டுத் தனித்து வைக்கப்படுவதைக் காணலாம். ஓசைக்காக யாப்பில் இஃது ஏற்கப்படும் என்றால், உரை நடையில் மேலான தெளிவு கருதித் தொகைச்சொற்களை உடைத்தெழுதுவதில் தவறில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது – ‘எல்லாத் தொகையு மொருசொ னடைய’ என்றபோதும்.

அறிஞர்களால் மேலும் ஆராயப்பட வேண்டியது இது.

இத்தொடர்பில் மொழிவல்ல, பனுவற்புலமை மிகுந்த அறிஞர் கருத்து எதிர்பார்க்கப்படுகிறது.


விஜயின் வெற்றிக்கழகம் தொடர்பாக மேலும் ஒரு பதிவு:

பெயரில் இருந்த பிழை சரி செய்யப்பட்ட பிறகு வெளிவந்திருக்கும் இந்த விளம்பரத்தை வைத்துக்கொண்டு சமூக ஊடக வில்லாளிகள் வழமை போல விஜயைக் கலாய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மைக்கு மாறாக ஊதிப்பெருப்பிக்கப்பட்ட பிம்பமாக ஒவ்வொருவரையும் உணர வைப்பது சமூக ஊடகத்தின் இயல்பு.

‘விஜய்க்கு நானும் இரண்டு அப்பு அப்பியாச்சு’ என்று கணப்பொழுது மகிழ்வதற்கு இந்தக் கலாய்ப்பு உதவும்.

அரசியல் தலைவராக விஜய் எல்லாவற்றையும் புரட்டிப்போடப் போகிறார் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.

ஆனால் ஒற்றுப்பிழையெல்லாம் ஊடகச்செய்தியாகி ஒரு கோடிப்பேரைச் சென்றடைவது விஜய் போன்ற உச்ச நட்சத்திரம் தொடர்புறும்போது மட்டுமே இந்தக்காலத்தில் நிகழக்கூடியது. தமிழின் அவல நிலை அப்படி. நீங்க நம்பலனாலும் அதான் நெசம்!

நிலைமை அப்படி இருக்க, ஒரு பிழை சுட்டிக்காட்டப்படும்போது அதை ஏற்கும் மனப்பக்குவத்துடன் அவர் இருக்கிறார் என்பது வரவேற்கப்பட வேண்டியது. சுற்றியிருக்கும் பாமர விசிறிகள் இப்படியான தேவையற்ற மிகைத்திருத்தங்களைச் (hyper-correction) செய்வார்கள் என்பது எதிர்பார்க்கக்கூடியதே.

மொழியின்பால் இன்னமும் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்று விஜயை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக்கொள்வதே நல்லது. அதுவே தமிழுக்கு நன்மை.

இந்த விளம்பரத்தில் வேண்டாத இடங்களில் ‘க்’ ஒற்று வந்திருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இனிவருங்காலங்களில் இப்படியான தவறுகள் தடுக்கப்பட வேண்டும். வெற்றிக்கழகம் தமிழ்ப்புலமையாளர் ஒருவரைத் தனது பரப்புரை அணியில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×