வெற்றியின் அபாயம்: தாவோ ஞானத்தை முன்வைத்து த்ரிஷ்யம் 2 பற்றிய ஒரு பார்வை

  • 3 நிமிட வாசிப்பு \

நிறையவே பாடுபட்டு ஒரு மலை உச்சியை அடைந்து விடுகிறீர்கள். அடுத்து என்ன? உச்சியை அடைந்தவருக்கு இனிமேல் எட்டுவதற்கு என்று ஓர் உயரம் இருக்காது. கீழே இருப்பது அதல பாதாளம்.

ஓர் ஆட்டத்தில்  வெற்றி அடைந்த பிறகு அடுத்து என்ன செய்வது என்பது சிக்கலான கேள்வி. வெற்றி என்ற மலையுச்சியை அடைந்து விட்டவர் எதிர் நோக்கும் அபாயம் பற்றித் தாவோயிசம் பேசுகிறது. வெற்றியின் போதை நமது கூர்மதியை மழுங்கச் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் முதலான பலரது நடிப்பில் வெளிவந்திருக்கும் த்ரிஷ்யம் 2 இந்தச் சிக்கலைச் சுவாரசியமாகக் கையாண்டிருக்கிறது. 

2013ம் ஆண்டு வெளிவந்த த்ரிஷ்யம் படத்தில் கதையில் வரும் ஒவ்வொரு மனிதர்களும் எப்படியானவர்கள் என்பதைச் சொல்லும் விதமாக முதற்பாதியின் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டாம் பாதி விறுவிறுப்பான ஒரு சதுரங்க ஆட்டம் போல நகர்ந்து கொண்டிருக்கும். அதிகார பலம்மிக்க காவல்துறை ஆணையாளரின் மகன் அப்பாவிப் பெண்ணை வஞ்சிக்க முயல்கிறான். தற்காத்துக் கொள்ள அப்பெண் அவனைத் தாக்குகிறாள். அது எதிர்பாராத விதமாக அவனது மரணத்தில்போய் முடிகிறது. பெண்ணின் குடும்பம் (மோகன்லால் குடும்பம்) காவல்துறையிடம் இருந்து தப்பி வாழ்வதற்கு அந்த மரணத்தை மூடி மறைப்பதொன்றே வழி.

தனது நிதானமான, பதற்றப்படாத சாதுர்ய புத்தியின் மூலம் காவல் துறையின் வேட்டையில் சிக்காமல் சாமான்யனான மோகன் லால் தனது குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுடன் படம் முடியும். 

இரண்டாவது பாகம் எடுக்கலாம் என்று திட்டமிடுகிறபோது ஜீத்து ஜோசப் சிந்திக்கிறார்: இதன் பிறகு நிகழக்கூடிய சாத்தியங்கள் என்னென்ன? 

காவல்துறையின் முழுப்பலம் தன்னிடம் இருந்தும் – தனது மகனின் மரணத்துக்குக் காரணமானவர்கள் யாரென்று தெரிந்தும் – சாட்சியம் இல்லாத காரணத்தால் சாமன்யர்களான அவர்களைத் தண்டிக்க முடியாமல் கையறு நிலையுடன் தோற்றுப்போய், ஏமாற்றத்துடன் வெளிநாடு செல்லும் பெண் உயர் அதிகாரி.

மறுபுறமாகத் தனது புத்திக் கூர்மையின் மூலமாகக் காவல்துறையைத் தனியொரு மனிதனாக எதிர்கொண்டு வெற்றி அடைந்திருக்கும் மோகன்லால். 

இப்படியான வெற்றியின் பிறகு மாயைக்குள் ஆழ்ந்திருக்கும் ஒரு மனிதன் ஒருவித சாகச மன நிலையை அடைவது இயல்பானது: ‘இவ்வளவு செய்து விட்டோம்… இதற்கு மிஞ்சி என்ன நடந்து விடப்போகிறது’ என்ற விதமான மன நிலை.

வெற்றியின் போதை ஒருவனை எப்படியெல்லாம் மாற்றிவிடும் என்பதை வரலாறு கண்டிருக்கிறது. அப்படியான ஒரு மிதப்பு நிலைக்குச் சென்று விட்டவராகத்தான் த்ரிஷ்யம் நாயகன் இரண்டாவது பாகத்தின் ஆரம்பத்தில் நமக்கு அறிமுகமாகிறார். கொலைக்குற்றம் இழைத்தும் சட்டத்தின் பிடிக்குள் சிக்காமல் தப்பிவிடும் நாயகன் வணிகத்தில் நல்ல இலாபம் ஈட்டுகிறார். சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடுகிறது. கூடவே குடிப்பழக்கம். இனிக் கேட்கவும் வேண்டுமா? வெற்றியின் உச்சியில் இருக்கும் அவர் தள்ளாடி அதல பாதாளத்தில் விழுந்து விடப் போகிறார் என்ற பதற்றம் பார்வையாளர்களிடத்தில் தொற்றிக்கொள்கிறது.

ஆனால் அது அவர் தோற்றுவித்திருக்கும் மாயை – எதிராளியைத் திசைதிருப்புவதற்கான தந்திரோபாயம் –  என்பது தெரிய வருகிறபோது தான் கதை சூடு பிடிக்கிறது. கதாநாயகன் மீது மறுபடி பிரமிப்பு ஏற்படுகிறது.

பத்து எதிரிகளை ஒரே கணத்தில் பந்தாடும் அசகாயசூரனாக நாயகனைக் காண்பிப்பதன் மூலம் பார்வையாளர்களை மலைப்பில் தள்ளுவதைத் தமது உத்தியாக வழமையான இயக்குனர்கள் கொண்டிருக்க, தீட்சண்யமான பார்வை, நிதானமான, தீர்க்கமான சிந்தனை ஆகியவற்றின் மூலமே நம்மை அசரச் செய்யும் இராட்சச நாயகனாக மோகன்லாலை – ஜோர்ஜ்குட்டியைக் – காட்டியிருப்பது ஜீத்து ஜோசப் செய்திருக்கும் மிகப்பெரிய சாதனை.

இந்தியா போன்றவொரு நாட்டில் கொலையாளி இவன் தான் என்று காவல்துறைக்குத் தெரிந்த பிறகும் ஒரு சாமான்யன் காவல்துறையின் இரும்புக்கரங்களுக்குள் சிக்காமல் தப்பி வாழ்வது சாத்தியமா என்ற கதையின் யதார்த்தம் சார்ந்த கேள்விகளுக்கு ஜீத்து ஜோசப் தனது நாயகன் ஜோர்ஜ் குட்டியின் வாயிலாகவே பதில் சொல்லியிருக்கிறார்: ‘கடைசியில் பார்க்கப்போனால் இது ஒரு சினிமா தானே. நாயகனுக்கு நல்லூழ் உண்டு என்று காண்பிப்பதில் என்ன சேதம்’ என்பது தான் அந்தப் பதில் (தான் எடுக்கப்போவதாகச் சொல்லும் சினிமாவில் முடிவு நாயகனுக்குச் சாதகமாக அமைக்கப்பட்டிருப்பதற்கு படத்தில் த்ரிஷ்யம் 2 நாயகனான மோகன்லால் அப்படித்தான் விளக்கம் கற்பிப்பார்).

இடர் வரும்போது நாயகன் கடைப்பிடிக்கும் நிதானம் தவறாத அணுகுமுறை பார்வையாளர்களிடத்தில் அகமலர்ச்சியை ஏற்படுத்திப் படிப்பினையாக அமைகிறது – ஒருவித கதார்சிஸ் (Catharsis) நிலையை உண்டுபண்ணுகிறது என்பதே முக்கியமானது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×