‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணம்’ உரைத்ததாகக் கூறுவார் மணிவாசகப் பெருமான். அவன் தாள் வணங்குதற்கும் அதன் வழியாக மெய்ப்பொருள் உணரும் நல்லூழ் வாய்த்தற்கும் அவன் அருள் கிட்டியாக வேண்டும்.
அருள் ஆகும் ஆற்றைப் (வழியை) போன பாடலில் உணர்த்தினார் அம்மை. அதன் விரிவு வரும் பாடலிற் சொல்லப்படுகிறது. காணும் பொருள் யாவிலும் நீக்கமற நிறைந்திருப்பது இறையே என்பதை அவன் அருளால் உணரலாம் என்பதும் தெரிவிக்கப்படுகிறது.
உலகெலாம் ஆள்விப்பது ஈசன் அருளே – எல்லா உலகையும் ஆள்விப்பது இறைவன் அருளே
அருளே பிறப்பறுப்பது – அவ்வருளே பிறவிப்பிணியை அறுத்து உய்ப்பது
அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் ஆனால் – இறையருளாலே மெய்ப்பொருளை – பரசிவத்தைத் – தெளிந்துணரும் நல்லூழ் கொண்டேனே ஆனால்
எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவது எனக்கு – எக்காலத்திலும் எந்தப்பொருளும் எனக்கு ஆவது – எல்லாப்பொருளும் என்னறிவில் அம்மெய்ப்பொருளாகவே ஆகி நிற்கும் என்பது பொருளாம்.
பாடல் 9
அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்
அருளே பிறப்பறுப்ப தானால் – அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ தெனக்கு.