மொழியும் இறையும் – கற்பிதங்களா அற்புதங்களா?

மனத்தின் – எண்ணத்தின் – ஒலியுருவாகத் திரண்டு நிற்கும் மொழிக்கு, எழுதப்படும் ‘எழுத்து’ என்ற வரிவடிவத்தை எக்காரணத்துக்காக மனிதன் கண்டுபிடித்தானோ அதையொத்த காரணத்துக்காகத்தான் இந்தப் பேரண்டத்தை ஆளும் எல்லையற்ற அருட்பொருளுக்கு ‘இறைவன்’ என்று பெயர் சூட்டி உருவங்களையும் உருவகங்களையும் அவன் சமைத்தான்.

‘அ’ என்ற வரிவடிவம் அம்மா என்ற சொல்லின் முதல் ஒலியைக் குறிக்கிறது என்பது, ஆழத்தில், ஒருவகைக் கற்பனையே. நாம் கற்பித்த தொடர்பினைத் தாண்டி அவ்விரண்டுக்கும் இடையில் இயல்பாய் எழுந்த தொடர்பேதும் இருப்பதில்லை.

‘அம்மா’ என்ற ஒலிக்கூட்டு அதன் பொருளாக நான் கருதுவதைக் குறிக்கிறது என்று கொள்வதும், ஆழத்தில், ஒருவகைக் கற்பனையே (மொழியின் இத்தன்மையை ‘இடுகுறி’ என்றனர் இலக்கணிகள்).

ஆனால் அம்மா என்ற, சொல்லுக்குள் அடங்காப் பேரன்பினுள் புகுவதற்கு ‘அம்மா’ என்னும் அச்சொல் நுழைவாயிலாக இருக்கிறது.

அச்சொல்லிடத்தே ஆண்டாண்டு காலமாக இடையீடின்றிச் செலுத்தப்பட்டு வந்த மன உணர்வு, அச்சொல்லுக்கான மெய்ப்பொருளை உருவாக்குகிறது. இந்தச் செயன்முறையின் பிறகு ‘அம்மா’ என்ற சொல் குறித்து நிற்பது இல்லாப்பொருள் ஒன்றையன்று!

இவ்வண்ணம் புரியாமையில் இருந்து புரிதல் நோக்கி – வெறுமையில் இருந்து பொருண்மை நோக்கி – நகர்வதற்கு மொழி கருவியாகிறது.

இடைத்தொடர்பாகும் இழையைத் துண்டித்துவிட்டால் மருட்சியில் சிக்கி உழன்று மாய்ந்து சரியத் தொடங்கும் உலகு.

அதேவேளை, மொழி கடந்து உணர்வுகளாக ஒருவரோடு ஒருவர் ஊடாடுவது எப்போதேனும் நிகழக்கூடுமானால் மொழியின் தேவை தீர்ந்துவிடும். அப்படியான ஒரு புள்ளியில் மொழியை மனித இனம் துறந்துவிடும்.

கடவுளுக்கான உருவங்களும் உருவகங்களும் இத்தகையனவே. அறியாமையில் இருந்து மெய்யறிவு நோக்கி நகர்வதற்கான கருவிகள்.

மன உணர்வைச் சரியாகக் கடத்தி முடிக்க இயலாமல் மொழி எத்தனை முறை தோற்றுப்போயிருக்கிறதோ – எத்துணை குழப்பங்களையும் மோதல்களையும் முரண்பாடுகளையும் உருவாக்கியிருக்கிறதோ, அத்துணை அளவு இறைமைசார் கருத்துருவங்களும் சிக்கல்களையும் பிளவுகளையும் பகைமைகளையும் ஏற்படுத்தி இருக்கின்றன.

ஆனால் தோல்விகளால் மாந்தரினம் துவண்டு விடுவதில்லை.

மொழியின் போதாமைகளை – அதனால் உண்டாகும் குழப்பங்களை – இந்த நுண்ணறிவு யுகத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் கடக்கத் தொடங்கியிருக்கிறோம்.

இறைமை என்னும் மெய்ப்பேரறிவு சார்ந்தும் இதுவே நிகழும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×