ஆசிரியப்பாவில் வெண்டளை மிக்கு வரலாமா: யாப்பாய்வு நூல்கள் சொல்லும் செய்திகள்

(உரையாடற் பின்னணி:

ஆங்கிலப் பெருங்கவிஞன் ஷெல்லியின் To a Skylark என்ற கவிதையை அண்மையில் இமயவரம்பன் (இரா. ஆனந்த்) அழகுறத் தமிழ்ப்படுத்தியிருந்தார். ஆற்றொழுக்குப் பிசகாத அகவற்பாவாக (அகவற்பா = ஆசிரியப்பா) அத்தமிழாக்கம் அமைந்திருந்தது.  இப்பாடலில் வெண்டளை மிகையாக வருவதன் பொருத்தப்பாடு குறித்து முனைவர் மயில்சாமி மோகனசுந்தரம் அவர்கள் புலனக் குழுமம் ஒன்றில் உரையாடலைத் தொடக்கி வைத்தார். தொடர்ந்து மரபின் மைந்தன் திரு முத்தையா, முனைவர் நா கணேசன் ஆகியோரும் வெவ்வேறு கோணங்களை முன்வைத்தனர். எனது தரப்பாக முன்வைத்த விளக்கத்தை இப்பதிவின் முதற்பகுதியில் தந்திருக்கிறேன். ஆய்வு நூல்களில் அறியக்கிடைக்கும் அருஞ்செய்திகள் சிலவற்றை இரண்டாம் பகுதியில் தொகுத்திருக்கிறேன். அறிவுத்தேட்டத்துக்கு ஊட்டமாய் அமைந்த அறிஞர் பெருமக்கட்கு அகங்கனிந்த நன்றி)

ஆசிரியப்பா தமிழின் பழம்பெரும் பா வகைகளுள் ஒன்று.

சங்க இலக்கியத்தில் உள்ள 2356 பாடல்களில் 2172 பாடல்கள் ஆசிரியப்பாவகையைச் சேர்ந்தவையே (காண்க: சங்க இலக்கிய யாப்பியல், அ.பிச்சை, பக் 75, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகம்). வாய்மொழிப் பாடல்களில் இருந்து பின்னர் புலவர்களால் இலக்கண வரையறை செய்யப்பெற்றது ஆசிரியப்பா என்கிறார் அ.பிச்சை. பயில் நிலையில் உள்ள பா ஆர்வலரும் எழுதிப் பழக ஏற்ற வடிவம். அத்தகு நெகிழ்ச்சித்தன்மை கொண்டது.

ஆசிரியப்பாவில் ஆசிரியத்தளை அல்லாப் பிற தளை விரவி வருதல் ஏற்புடையதா என்ற கேள்வி அண்மையில் யாப்பியல் சார்ந்த புலனக்குழும உரையாடல்களின்போது ஆராயப்பட்டது.

இக்கேள்விக்கான சுருக்கமான பதில்:

ஆசிரியப்பாவில் இயற்சீர் வெண்டளை விரவி வருதல் இழுக்கன்று. (இயற்சீர் வெண்டளை + இருவகை ஆசிரியத்தளை) = பெரும்பான்மை, (வெண்சீர் வெண்டளை + கலித்தளை) = சிறுபான்மை. இந்த அமைப்பே அகவலோசையைத் தருகிறது. வேறு வகையிற் சொல்வதென்றால் பெரும்பான்மை ஈரசைச்சீர்கள் வந்தாலே அகவலோசை வந்துவிடும் – ஆசிரியத்தளை அறவே அருகிப்போம் நிலை வாராதபடி பார்த்துக்கொள்ளுதல் அவசியம்.

கற்கும் பாடல்களைத் தன்னிச்சையாகத் தளைபிரித்துப் பார்க்கும் மனப்பழக்கத்தின் அடிப்படையிலும் கவி யாத்தலின்போது உளம் கடைப்பிடித்தொழுகும் ஓசை இயைபை வைத்தும் மேற்கண்டவாறு கூறுகிறேன். இக்கூற்றைப் பாடற் சான்றுகளை வைத்தும் விளக்க முடியும்.

வெண்டளை மிகையாக அல்லது ஆசிரியத்தளையும் வெண்டளையும் ஏறத்தாழச் சம அளவில் உள்ள பல அகவற்பாக்களைச் சங்க இலக்கியத்தில் காண முடியும். குறிப்பாகப் பல அடிகள் பயின்றுவரும் நெடும்பாக்களில் இதுவே நிலை.

ஒளவையின் விநாயகர் அகவலில் வெண்டளை 57%.   ஆசிரியத்தளை 40%. கலித்தளை 3%.

ஆசிரியத்தளை மிக்குவரும் நெடும்பாடலென்று சிந்தித்தால் போற்றித் திரு அகவல் நினைவுக்கு வருகிறது. இதில் வெண்டளை வீதம் குறைவே.

ஆர்வமுடையோர் http://www.avalokitam.com/analyzer என்னும் யாப்பாய்வுக் கருவி கொண்டு விழுக்காட்டுப் பெறுமானம் அறிந்து கொள்க.

மேற்சொன்ன புலனக்குழும உரையாடல் அகவற்பாவைப் பற்றி மேலும் தேடிப்படிக்கத் தூண்டுகோலாக அமைந்தது. துழாவலின்போது கிட்டிய பயன் தரு செய்திகளைக் கீழே தொகுத்திருக்கிறேன் (தொல்காப்பியரையும் புலவோர் வழக்கையும் துணைகொண்டு முனைவர் சோ. ந. கந்தசாமி அவர்கள் முன்வைக்கும் துணிபு மேலே நான் சொன்னதை வழிமொழிவதாகவே இருக்கிறது):  

தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்: முதல் பாகம் – முதல் பகுதி, முனைவர் சோ. ந. கந்தசாமி, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், பக்கம்  305,306

ஆசிரியப்பாவிற்கு உரிய தளைகள்

இருவகை ஆசிரியத்தளையும் இப்பாவிற்கு உரியன. இயற்சீர் வெள்ளடி ஆசிரியப்பாவின்கண் நிற்றலும் உண்டு என்று ஆசிரியர் இயம்புதலால், இயற்சீர் வெண்டளையும் இப்பாவிற்கு உரியது என்பது புலனாகும். அடுத்து, வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும் வரும் ஐஞ்சீரடிகள் ஆசிரியப்பாவில் வருவன உள என்றார். இங்குச் சுட்டப்படும் வெண்டளையினையும் இளம்பூரணர், இயற்சீர் வெண்டளை என்று எண்ணினார். அதனை இதற்கு முன்னைய நூற்பாவில் ஆசிரியர் சுட்டியிருத்தலாலும், வெண்பா உரிச்சீராகிய நேரீற்று மூவசைச்சீர் இன்னோசை பொருந்திவரின் ஆசிரியப்பாவில் வழங்குதல் கடியப்படாது என்று வரையறுத்தலாலும், இந் நூற்பாவில் சுட்டப்படும் வெண்டளை வெண்சீர் வெண்டளையினைக் குறித்ததாகக் கொள்ளுதல் பொருத்தம் மிக்கதாகத் தோன்றுகிறது. எனவே, இருவகை வெண்டளையும் ஆசிரியத் தளையுடன் விரவிவரும் அடிகள் ஆசிரியப்பாவிற்கு உரியன என்பது தெளிவு. விடுபட்டனவாகிய கலித்தளை, வஞ்சித்தளை என்பன ஆசிரியப்பாவில் வருதல் குறித்துத் தொல்காப்பியர் தெற்றென விதிகள் செய்திலர். எனின், ‘வஞ்சி உரிச்சீர் வருதலைச் சுட்டுதலின், வஞ்சித்தளை வருதலும் சுட்டப்பட்ட தாகக் கொள்ளுதல் வேண்டும். ஆசிரியமும் வஞ்சியும் ஓரினப் பாக்களாதலின் இங்ஙனம் எண்ணுதல் சாலும், கலி உரிச்சீர் எனத் தனியாக ஒன்றின்மையின், வெண்சீர் கலிப்பாவில் வருதல் போல் ஆசிரியப்பாவில் வருதலும் ஆசிரியர்க்கு உடன்பாடாகலின், கலித்தளை வருதலும் விலக்கப்படாது என்பது கருத்து.

ஆதலின்; ஆசிரியப்பாவில் மிகுதியாக ஆசிரியத்தளையும் இயற்சீர் வெண்டளையும் பயின்று வரும் என்பதும், ஏனைய தளைகளில் வெண்சீர் வெண்டளை அளவிற்குக் கலித்தளையும் பயின்று வாராவேனும் அருகிவரும் என்பதும் அறியற்பாலன. வெண்பாவிற் காணப்பெறுதல் போன்ற கடினமான இலக்கணக் கட்டுப்பாடு இப்பாவிற்கு இல்லை என்பதும், தங்கு தடையின்றிக் கருத்துக்களைப் புலப்படுத்தற்கு இத்தகைய நெகிழ்சி இடம் தரும் என்பதும், இப்பாவே சங்க காலத்துக் கூடுதலாக வழங்கி வந்தது என்பதும் கருதற்பாலன.

பக்கம் 234, 235:

1. அகவல் ஓசை

அகவல் என்னும் ஓசை ஆசிரியப்பாவிற்கு உரியது. அகவிக் கூறுதலால் அகவல் என்பது காரணப்பெயர். அஃதாவது கூற்றும் மாற்றமுமாகி ஒருவன் கேட்ப அவனுக்கு ஒன்று செப்பிக் கூறாது தாம் எண்ணியவாறெல்லாம் எடுத்துக் கூறுதல் உண்டு. இதனை ‘அழைத்தல்’ என்னும் வழக்கினுள் கூறுவர். அவ்வாறு சொல்லுவார் சொல்லின்கண் எல்லாம் தொடர்ந்து கிடந்த ஓசை அகவல் எனப்படும் என்பர் பேராசிரியர். களம் பாடும் பொருநர், தச்சுவினைமக்கள், கட்டும் கழங்குமிட்டுக் குறி கூறுவார், தம்மின் உறழ்ந்துரைப்பார், பூசலிசைப்பார் ஆகியோரிடத்தில் அகவலோசை கேட்கப்படும் என்பர். குறுந் தொகையில்,

”அகவன் மகளே அகவன் மகளே”

எனக் குறிக்கப்பெறுதலும், பரிபாடலில் ‘அகவுநர்’ என்று வழங்கப்பெறுதலும் இங்கு எண்ணுதற்குரியவை. அகவல் ஓசை செம்மையுடையது என்னும் கருத்தில் செந்தூக்கு என்றும் ஆசிரியர் குறித்தனர். பதிற்றுப்பத்தின் கொளுக்களில் இச்சொல்லாட்சி காணப்படுகிறது

ஆசிரியப்பாவிற்கு உரிய சீரும் தளையும் இருந்தும் அகவ லோசை அமையாது விடின், அதனைச் சிறந்த ஆசிரியப் பாட்டாகக் கருதமாட்டார்கள்.

அகவலே தொல் திராவிட யாப்பு – அ.பிச்சை

சங்க இலக்கிய யாப்பியல், அ.பிச்சை, , நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகம், பக்கம்  64-67

3.3.தொல் யாப்பு

இலக்கிய வகைகளில் தொன்மையும் பெருமையும் மிக்கது பாட்டு. தென் திராவிட மொழிகளில் முந்தை இலக்கிய வடிவம்பற்றி சுனித்குமார் சட்டர்ஜி கீழ்க் கண்டவாறு விளக்குகிறார்:  தமிழிலும் மலையாளத்திலும் “பாட்டு” என்றும், தெலுங்கில் “பாடு” என்றும் கன்னடத்தில் “உறவாடு” என்றும் பா ஆக்கத்திற்குக் குறிப்பிடப்படும் சொற்களை ஆராயும்பொழுது, தென்திராவிட மொழிகளுக்கெல்லாம் பொதுவான பாஆக்க மரபு (a primitive Dravidian inheritance of verse composition) ஒன்று இருந்திருக்க வேண்டும்; மேலும் தமிழிலும் மலையாளத்திலும் உள்ள பழைய யாப்புக்களுக்கு தெலுங்கிலும் கன்னடத்திலும் உள்ள தேசி யாப்புக்களுக்கும் (desi metre) வரிவடிவமில்லா திராவிட மொழிகளில் உள்ள நாட்டுப்புறப் பாடல்களின் யாப்புக்களுக்கும் பொதுவான தொல்திராவிட அடிப்படை (primitive Dravidian basis) ஒன்று இருந்திருக்க வேண்டும். திராவிட மொழிகளிலே, குறிப்பாக இலக்கியத் திராவிட மொழிகளிலேயே (literary Dravidian languages) தொன்மையும் செம்மையும் கொண்ட இலக்கியங்களை உடையது தமிழ். திராவிட மொழிகளில் முந்தைய திராவிட மொழிக் கூறுகளையும் வடிவங்களையும் அதிகமாகப் பேணிக் காத்து வந்திருப்பதும் தமிழ். எனவே, தமிழ் மொழி ஒன்றே அந்தத் தொல் திராவிட யாப்பினைக் கொண்டிருக்கவேண்டும் என்று ஊகிக்க முடிகிறது.

3.3.1.கலிப்பா,பரிபாடல் – தொன்மை வடிவங்கள்

ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலிப்பா என்ற நான்கும் அடிப்படையான தமிழ்ப் பாவடிவங்கள் என்று தொல்காப்பியர் முதலான எல்லா யாப்பியலார்களும் குறிப்பிட்டுள்ளனர். தொல் வடிவம் என்ன என்பது கூறவில்லை. தமிழண்ணல் ‘சங்க இலக்கிய ஒப்பீடு’ என்ற நூலில் தொன்மை மிக்க வடிவம் பற்றித் தமது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதாவது, ‘கலிப்பாவும் பரிபாடலும் தொன்மை மிக்கனவாகப்படுகின்றன. இவற்றுள் எல்லாப் பாவடிவங்களும் அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது. பரிபாடலுக்கும் கலிப்பாவிற்கும் உறுப்பு, வகை அடிப்படையில் பல ஒற்றுமைகளும் உண்டு. எனவே, பரிபாடல், வரிப்பாடல் என்பன தொன்மை மிக்க வடிவமாகவும் கலிப்பா, வஞ்சி, வெண்பா, ஆசிரியம் என்பன படிப்படியே கிளைத்த வடிவங்களாகவும் ஆராய இடமிருக்கிறது’ என்று தமிழண்ணல் விளக்கியிருக்கிறார். ஆனால் அவரே மற்றோர் இடத்தில் ‘கலிப்பா, வரிப்பா, பரிபா இவையெல்லாம் ஓரினமாய் – ஒரே மூலத்தினின்றும் வளர்ச்சி பெற்றனவாய்க் காணப்படுகின்றன’ என்றும் கூறியுள்ளார்.

3.3.2. அகவற்பா, வஞ்சிப்பா -தொன்மை வடிவங்கள்

கமில்சுவலபில், அமைப்பு (structure) அடிப்படையில் பாவடிவங்களின் வளர்ச்சியைக் குறிப்பிட்டுள்ளார். “அகவல், வஞ்சிப்பாக்களை ஒப்பிடும் பொழுது கலிப்பாவின் யாப்பும் – அமைப்பும் பிற்காலத்தில் தோன்றிய வடிவம் என்பதைக் காட்டுகின்றன. கலிப்பாவின் அமைப்பு ஆசிரியமும் வெண்பாவும் கலந்து வளர்ந்த நிலையைக் காட்டுகிறது. எனவே கலிப்பா வரலாற்று நிலையில் பார்க்கும்பொழுது அகவல் வஞ்சிப்பாக்களை விடப்பிந்தியது என்பதை மறுக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். கமிலசுவலபில் கருத்துப்படி முதலில் அகவலும், அடுத்து வஞ்சியும், அடுத்து வெண்பாவும் தோன்றியிருக்கின்றன; அகவலும், வெண்பாவும் கலந்து கலிப்பா தோன்றியிருக்கிறது. ஆனால் தமிழண்ணல் கருத்துப்படி பரிபாடல், வரிப்பாடல் ஆகியவற்றிலிருந்து வஞ்சி, வெண்பா, ஆசிரியம் கிளைத்திருக்கின்றன. இனி எது சரியான விளக்கமாக இருக்கலாம் எனக் காணலாம்.

3.3.3. அகவலே தொல் தமிழ் யாப்பு

தொல்காப்பியர் ஆசிரியம் – வஞ்சி – வெண்பா – கலிப்பா என்ற வரிசையில் கூறுவதும் ஆசிரியத்துள் வஞ்சியையும், வெண்பாவுள் கலிப்பாவையும் அடக்குவதும் கமில்சுவலபில்லின் விளக்கத்திற்கு அடிப்படையாகும். ஆனால் தொல்காப்பியர் பாக்களைத் தோற்றத்தின் வளர்ச்சியின் அடிப்படையில் வரிசைப் படுத்தவுமில்லை; ஒன்றினுள் ஒன்றாக அடக்கவுமில்லை.” சீர்கள், அவற்றின் நடை, பாவின் முடிவு போன்ற வடிவ அமைப்புக்கூறுகளின் அடிப்படையில் அந்நான்கு பாக்களையும் நிரலாகக் கூறியுள்ளார்.

தமிழண்ணல் கலிப்பாவிலும் பரிபாடலிலும் வந்துள்ள வாய்மொழிக் கூறுகளையும் நாடகப் பாங்கினையும் இசையினையும் கொண்டு தொன்மை மிக்க வடிவமாக அவற்றைக் கூறியுள்ளார். சமுதாயப் பின்னணி – பா ஆக்கமுறை – பாடுபொருள் ஆகியவற்றின் அடிப்படையில் பாவடிவங்களை நோக்குவோமானால் முதலில் ஆசிரியமும், இரண்டாவதாக வஞ்சியும், மூன்றாவதாக கலிப்பாவும், நான்காவதாக வெண்பாவும் தோன்றியிருக்க வேண்டும். சமய உணர்வும், குழுத்தலைவனை வாழ்த்தும் தன்மையும் கொண்ட இனக்குழுச் சமுதாயத்தில் அகவல் தான் தோன்றியிருக்கக்கூடும். இதுவே பாஆக்கத்தில் எளிமையானது. எந்த விதமான -அதிகமான கட்டுப்பாடுகள் இல்லாத பா அகவற் பாவாகும். அதற்கு அடுத்து இனக்குழுக்கள் ஒன்றை ஒன்று அழிக்கத் தொடங்கும் நிலவுடைமையுணர்வு பூத்துவிட்ட சமுதாயத்தில் வஞ்சிப்பா தோன்றியது; இதுவும் அகவற் பாவைப் போன்று எளிமையானது. இவ்விரண்டும் வாய்மொழிப் பாடல்களுக்கு (பாணர்களுக்கு) ஒன்றை வருணித்துப் பாடுவதற்கும் * பட்டியல் போல எடுத்துரைப்பதற்கும் பொருத்தமானவையாக ஆளப்பட்டன என்று க. கைலாசபதி கூறுவர். மற்றும், அவர் யாப்பைப் பொறுத்த வரையில் வீரயுகப் பாடல்கள் தனிப்பட்ட வளர்ச்சியைக் காட்டுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். வீரயுகத்திற்குப் பிற்பட்ட – வேந்தனைத் தலைமையாகக் கொண்ட சமுதாயப் பின்னணியில் மேம்பட்ட வகுப்பினரை மகிழ்வுப்படுத்த நாடகப் பாங்கான கலியும் பரியும் தோன்றின. கலிப்பா பா ஆக்க முறையில் செறிவும் ஆனால் கொஞ்சம் நெகிழ்ச்சியும் பெற்றது. புலவர்களே அரசியலமைப்பில் இடம்பெற்று நீதி உரைப்பவராகவும் இருந்ததால், புலவர்களால் வெண்பா படைக்கப்பட்டது. சிந்தியல் வெண்பா அளவியல் வெண்பா ஆகியவை தமிழ் யாப்பியலுக்குப் புதியவை என்றும், சமஸ்கிருத சுலோகங்களை மாதிரியாகக் கொண்டு படைக்கப்பட்டவை என்றும்’ என்.வி. கிருஷ்ணவாரியார் கூறுவதும் இவண் குறிப்பிடத்தக்கது. இங்கு பாஆக்க முறையில் நெகிழ்ச்சியின்றி இறுக்கமான வடிவத்தை வெண்பா அடைகிறது. கலிவெண்பாவைக் கலிப்பா வகைகளுள் ஒன்றாகத் தொல்காப்பியம் கூறுவதால் வெண்பா கலிப்பாவிற்குப் பின் தோன்றிய வடிவம் என்று கொள்ள இடமிருக்கிறது.

 3.3.4. அகவலே தொல் திராவிட யாப்பு

அகவல் என்பதைத் தொல் பாவடிவமாகக் (Proto-metre) கொண்டால் தமிழைப் போன்ற பிற இலக்கியத் திராவிட மொழிகளில் ஏதேனும் இணையான வடிவங்கள் (corresponding forms) உள்ளனவா என்று காணவேண்டும். சர்மா தெலுங்கில் “அக்கலப்பாட” எனப் பெறுவது தமிழ் அகவலே எனக் கூறியுள்ளார். தமிழில் நேரசையும் நிரையசையும் பலவாறாக இணைந்து சீர்களாகின்றன; தெலுங்கில் காணப்பெறும் சீதபத்யா, தீவிபத்யா, உத்சாகா போன்றவை, ஏலா, ஜோலி, லாலி, மேல்கொதுபு, மங்கலம் போன்ற நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவை இச்சீர் அமைப்பினைப் பின்பற்றுவன என்றும், அவை அகவலின் பல்வேறு அமைப்புக் கோலங்களே என விளக்கமுடியும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் மலையாள வேலன் பாட்டு, பாணன் பாட்டுப் போன்றவை அகவலோடு தொடர்புடைய வடிவங்களாக இருக்கக்கூடும். திராவிட மொழிக்குத் தொன்மையான பொதுமையான பாவடிவம் என்னவென்று மீட்டுருவாக்கம் செய்வோமானால், அவ்வடிவம் அகவற் பாவடிவமாக இருக்கக் கூடும். ஆகவே தமிழில் மட்டுமின்றித் திராவிட மொழிக்கே அடிப்படையான பாவடிவமாக அகவற்பா உள்ளது என்று கூறுலாம். இம்முடிவு இன்னும் விரிவாக ஆராய்ந்து உறுதிசெய்யப்பட வேண்டிய ஒன்று.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×