ஒருமை: அற்புதத் திருவந்தாதி (பாடல் 11)

எந்த இலக்கை அடைவதற்கும் எண்ணம் ஒருமுகப்பட வேண்டியது இன்றி அமையாதது.

எண்ணத்தை ஒருமுகப்படுத்துவது முதற்படி. 

அந்த ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் குறுக்கிடும் வேற்று எண்ணங்களை விலக்குவது அடுத்தபடி. 

உமி நீக்கப்பெற்ற அரிசி போல இலக்கின்பால் ஒருமை எண்ணம் வாய்த்த பிறகு அந்த எண்ணத்தைச் சிதறாதபடி காத்து, இலக்கை நோக்கிச் செயலாற்றுவது மூன்றாம் படி.

எல்லோர்க்கும் எளிதில் கூடி வருபவை அல்ல இவை; துணிவையும் முயற்சியையும் கோரி நிற்பவை.

குலைவும் குழப்பமும் களைந்து ஒருமை நோக்கி ஓடும் பெருக்காகவே அம்மையின் அகமொழி உருப்பெறுவதை ஒவ்வொரு பாடல் வழியாகவும் பார்த்து வந்தோம்.

முதற்பத்துச் செய்யுட்கள் முடிந்ததும் இந்த ஒருமையை உறுதிபடக் கூறுகிறார் பதினோராம் பாடலில்.

ஈடேற்றத்துக்கு எண்ணத்தைப் புடம்போட வேண்டிய படிமுறைகளையும் விளக்குகிறார்.

கிளைகளாகப் பிரிந்தோடி வந்த ஆறு ஒரு புள்ளியில் ஒன்றாகி, ஒப்பில்லாப் பெருக்காகிக் கடலை அடைய வேகமெடுப்பதுபோல் இருக்கிறது இறைவனை நோக்கிய அவர் மனத்து உந்துதல்.

ஒன்றே நினைந்திருந்தேன் – ஒன்றை மட்டுமே நினைந்திருந்தேன்

ஒன்றே துணிந்து ஒழிந்தேன் – அந்த ஒன்றை மட்டுமே நாடுவது என்ற உறுதியில் ஏனைய யாவற்றையும் விடுத்தேன்

ஒன்றை என் உள்ளத்தின் உள்ளடைத்தேன் – அவ்வாறு பேணிய அந்த ஒன்று என் உள்ளத்தை விட்டு நீங்காதபடி அதனை உள்ளே சிறைசெய்தேன்

ஒன்றே காண் – அந்த ஒன்று எது என்பதை உணர்த்தக் காண்பீர்

கங்கையான் – கங்கையைத் தலையில் கொண்டவன்

திங்கட் கதிர்முடியான் – முடியில் மதிசூடித் தூவெண் கதிர் சூழப் பெற்றவன்

பொங்கு ஒளி சேர் அங்கையாற்கு – பொங்கும் ஒளியுடைய நெருப்பை உள்ளங்கையில் சுமந்தவன்; அவனுக்கு

ஆளாம் அது – ஆளாகும் எண்ணமே அது

பாடல் 11

ஒன்றே நினைந்திருந்தேன்; ஒன்றே துணிந்தொழிந்தேன்;
ஒன்றையென் உள்ளத்தின் உள்ளடைத்தேன் – ஒன்றேகாண்
கங்கையான், திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற்(கு) ஆளாம் அது.

ஒன்றை மட்டுமே நினைந்திருந்தேன். அந்த ஒன்றை மட்டுமே நாடுவது என்ற உறுதியில் ஏனைய யாவற்றையும் விடுத்தேன். அவ்வாறு பேணிய அந்த ஒன்று என் உள்ளத்தை விட்டு நீங்காதபடி அதனை உள்ளே சிறைசெய்தேன். அந்த ஒன்று எது என்பதை உணர்த்தக் காண்பீர் . கங்கையைத் தலையில் கொண்டவன். திங்கட் கதிரொளி சூழப் பெற்றவன். பொங்கும் ஒளியுடைய நெருப்பை உள்ளங்கையில் சுமந்தவன்; அவனுக்கு ஆளாகும் எண்ணமே அது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×