இறைவன் பெயரை ஓதுவதால் மட்டும் என்ன கண்டு விட முடியும் என்று ஐய வயப்பட்டவர் போலப் பொய்யாகக் கவன்றார் போன பாடலில்.
உண்மையில் உள்ளம் ஒருமித்து இறைவன் திருப்பெயரைச் சொல்லிக்கொண்டிருப்பதால் அடையக்கூடியது எது என்பதை இப்பாடலில் சொல்கிறார் அம்மை.
இரைச்சல் மிகுந்து ஓயாதிருக்கும் கடலினைப்போல, எண்ணப்பெருக்கத்தால் அமைதியற்றிருப்பது மனம். பிறவித்தொடரை இதுவே நீளச் செய்கிறது.
எண்ணப் பெருக்கம் ஒழித்து ஒருமையுற, இடையறாமல் இறை நாமம் ஓதுவது சிறந்த வழி. இவ்வழியை முறையாகக் கைக்கொண்டால் கிட்டுவது என்ன?
இறைவன் அருள்சேர்ந்தோம் – (இந்த அரிய செயலால் அடியவராகிய நாம்) இறைவன் அருள் சேர்ந்தவர்கள் ஆனோம்
இனியோம் நாம் உய்ந்தோம் – இனியவர்கள் ஆனோம். உய்தி பெற்றோம்.
இனியோர் வினைக்கு அடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக் கனைக்கடலை நீந்தினோம் –
கனைக்கடல் – ஒலிக்கடல். ஒலி பெருகும் கடலாகப் பிறவி உருவகிக்கப்பட்டது.
கடல் ஒலி போலப் பெருகும் எண்ணங்களே (சித்த விருத்தி என்பார் பதஞ்சலி. சங்காரங்களின் பெருக்கம் என்பார் புத்தர்) வினைக்கு வலிமை சேர்க்கின்றன (அடல் = வலிமை). அதனால் பிறவி நீள்கிறது. பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க இயலாது போகிறது.
ஆனால் இறைவன் திருப்பெயரை இடையறாமல் சொல்லிச்சொல்லி இந்த இரைச்சலைக் களைந்து விட்டோம் நாம். எனவே பிறவிக்கடலை நீந்திக் கடப்பது இயலுமாயிற்று.
நெஞ்சே காண் – நெஞ்சே இதை உணர்வாயாக.
‘அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது’ என்ற பொய்யாமொழியையும் நினைவிற் கொள்க.
மலர் புனைந்து சூட்டும் தேவர்க்கே அவன் அடி சேரும் பேறு கிட்டவில்லை… வெறுமனே அவனை நினைத்து, அவன் பேர் சொல்லி அழைத்துத் தவிக்கும் எனக்கு நல்லருள் கிட்டுமோ? இது பொதுவாக அன்பர் அகத்தெழும் ஐயம். (போன பாடலில் சொல்லப்பட்டது). கிட்டும் என்பதைத் தெளிவித்தார். இதுவரை தன்னைக் குறித்து ஒருமையிலேயே பேசி வந்தவர் ( நான், எனது), இவ்விடத்து அடியார் அனைவர்க்குமான குரலாகப் பேசுவது காண்க.
பாடல் 16
இனியோநாம் உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்;
இனியோர் இடரில்லோம், நெஞ்சே; – இனியோர்
வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்