மனித நம்பிக்கைகள் புலன்வழித் துய்ப்பில் இருந்து தோற்றம் பெறுகின்றன.
கீழைத்திசையில் பரிதி உதிப்பதை ஒவ்வொரு நாளும் இரு விழிகளாற் காண்கிறோம். ஒரு நாளேனும் ஞாயிறு உதிக்கத் தவறியதாய் உலகில் இதுவரை செய்தி வந்ததில்லை.
நாள் தோறும் கீழ்த்திசையில் ஞாயிறு தோன்றும்; நாளையும் ஞாயிறு தோன்றும் என்ற நம்பிக்கை உருவாகிறது. நீண்ட காலத் தரவுகளின் வழி இந்த நம்பிக்கை நிறுவப்பெற்று நிலை பெறும்போது அது அறிவாக மாறுகிறது. இத்தகைய அறிவை empirical knowledge என்பர் மேலை மெய்யியலாளர்.
புலன்வழித் துய்ப்பை நம்புவது மனித மனத்துக்கு எளிதான ஒன்றாகவும் இயல்பான ஒன்றாகவும் உள்ளது.
இத்தகைய மேல் தள உண்மைகளைத் தாண்டி, ஆழ் உண்மைகளை அறிவது எப்படி? அறிவியல், மெய்யியல் ஆய இரண்டினது தேடலும் இதுவாகவே உள்ளது.
Empirical knowledge என்ற துய்ப்பறிவை (அனுபவ அறிவை) முதற்புள்ளியாகக் கொண்டு புறவுலகு நோக்கிய உய்த்தறிதல் மூலம் அறிவியல் வளர்கிறது.
அதே புள்ளியில் இருந்து அகமுகமாகத் திரும்புவதன் மூலம் மெய்யியல் ஒளிரத் தொடங்குகிறது.
இரண்டு பாதைகளில் எந்த ஒன்றைத் தேர்வு செய்தாலும் முன்னேறிச் செல்வதற்கு முயற்சியும் உழைப்பும் தேவை.
முயல்தலை விழைய மாட்டா மனம் எளிய வழிகளைத் தேடுகிறது. புலன்வழி வாய்த்த உணர்வுகளே இந்த மனத்தினை நிறைத்துக்கொண்டுள்ளன. காணல், கேட்டல், சுவைத்தல், முகர்தல், உணர்தல் ஆய ஐம்புலன் வழி அடையும் துய்ப்பை (அனுபவத்தை) மட்டுமே அது அறிவாக ஏற்றுக்கொள்கிறது.
இறைவனைப் பற்றி எண்ணும்போது பலர் மனத்தே எழும் முதலாவது கேள்வி இதுவாகவே இருக்கிறது.
“இதோ என் கண்களால் நான் உங்களை நேரில் காண்கிறேனே. இப்படி நீங்கள் தொழுது திளைக்கும் காளியை என் கண் கொண்டு காண முடியுமா?” என்று இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் கேட்டார் நரேந்திரர்.
“என்னைப் போல அன்று. என்னைவிடத் தெளிவாகவே நீ அவளைக் காணலாம்” என்றார் பரமஹம்சர்.
அற்புதத் திருவந்தாதியின் பதினேழாம் பாடலில் இதே செய்தியைத்தான் காரைக்கால் அம்மையும் சொல்கிறார்.
தொல்லுலகுக்கு ஆதியாய் நின்ற அரன் – தோற்றம் முடிவு இரண்டுமற்று எப்போதும் தொல் உலகுக்கு முதல்வனாக இருப்பவன் சிவன். வினைகளை அரிந்தறுப்பதால் அவனே அரன் எனவும் அழைக்கப்பெறுகிறான்.
காண்பார்க்குங் காணலாந் தன்மையனே – மனிதர்கள் அன்றாடம் தமது விழிகளால் இந்த உலகைக் கண்டு கொண்டிருப்பவர்கள். அத்தகையவர்களாலும் காணல் ஆகும் தன்மை கொண்டவன் அரன். எல்லோரும் அவனைக் காணுதல் இயல்வதே என்பதாம்.
கைதொழுது காண்பார்க்கும் காணலாம் (தன்மையனே) – மெய்யைக் கருவியாக்கிக் கை தொழுது வணங்கி வருவோர்க்கும் அவன் காணல் ஆகும் தன்மையனே.
காதலாற் காண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே – உள்ளன்பால் உருகித் தொழுவோர்க்கோ சிந்தையிலே அருட்பெருஞ்சோதியாகவும் தோன்றுவது சிவம்.
இறைவனைப் பல்லாற்றானும் காணலாம் என்பது உட்பொருளாம்.
நாற்குரவர்களையும் இறைவன் ஆட்கொண்ட முறைகளை இவ்விடத்து எண்ணிப் பார்த்தல் பொருத்தமுடைத்து.
பாடல் 17
காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது
காண்பார்க்குங் காணலாங் காதலாற் – காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்
காதியாய் நின்ற அரன்.