நீங்கள் சேமித்து வைத்திருக்கும் செல்வம் எவ்வளவு? உங்கள் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டிருக்கும் பணத்தை எவ்வளவு நேரத்துக்கொரு முறை எண்ணிப்பார்த்துக்கொள்கிறீர்கள்? (எண்ணுதல் = counting/thinking)
அருளின்பால் பற்றுறுதி கொள்ளாமல் பொருளின்பால் அன்பு பூண்டவர்க்குத் தம் வைப்பில் (சேமிப்பில்) மீந்திருக்கும் நிதியே அமைதி தருகிறது. எவ்வளவு தான் முயன்று காத்தாலும் ஒரு நாள் தீர்ந்துபோய் உள்ளத்துக்கு இடும்பை தரக்கூடியது பொருட்செல்வம்.
அம்மை நாடுவதோ அங்கை மேல் அழல் சுமந்த பெம்மானின் அலகில்லா அருட்செல்வம்.
இத்தகைய செல்வத்தை வைப்பாகக் கொள்வதே மதியுடைமை.
பாடல் 10
எனக்கினிய எம்மானை, ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன்; – எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய தொன்று.
—
எனக்கினிய எம்மானை, ஈசனை – எனக்கு இனிய தலைவனை, இறைவனை
யான் என்றும் மனக்கினிய வைப்பாக வைத்தேன் – நான் எப்போதும் மனத்துக்கு இனிய வைப்பாக வைத்தேன். வைப்பு – மேலே குறிப்பிட்ட சேம நிதி. எப்போதும் பேணிப்பாதுகாக்க வேண்டியதும் எண்ண வேண்டியதும் அவன் உரு என்பதாம். வைப்பு – முழு உலகு என்னும் பொருளும் உண்டு. எனது உலகாகக் கொண்டேன் எனலும் பொருந்தும் (‘ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே’ – பாரதியார்). மனத்துக்கு இனிய என்பதில் அத்துச்சாரியை தொகுக்கப்பட்டது.
அவனை எனக்குப் பிரானாகக் கொண்டேன் – அவனை எனக்கான தலைவனாகக் கொண்டேன்
கொள்வதுமே இன்புற்றேன்; உண்டே எனக்கரிய தொன்று – இவற்றையெல்லாம் கொண்டதும் பேரின்பம் வாய்த்தது. இனி என்னிடத்து இல்லாதது என்று ஒன்றுண்டோ?