தீயைப்போன்ற கொடிய நஞ்சை உமிழும் நாகத்தை ஏன் சிவனார் தன் கழுத்தில் அணிந்திருக்கிறார்?
நஞ்சை உமிழ்வது நாகத்தின் இயல்பு. அது சிவனாரிடத்து வயப்பட்டு இருக்கும்வரையில்தான் தனது கொடுங்குணம் விடுத்து அமைதி பேணும்.
நஞ்சுமிழும் நாகத்தை ஒத்ததே நம் நெஞ்சமும்.
தீயெண்ணங்களால் தகித்துக்கொண்டிருப்பது.
இத்தகைய எண்ணக் கெடுதியும் கெடுதியை அறிந்துணர இயலாதபடி திரையாக இருந்தியங்கும் மாயையும் எதனால் உருவாகின்றன? எங்கிருந்து வருகின்றன?
புலன்களால் உணரப்படும் இந்த உலகம் எல்லாக் காலமும் மாறிக்கொண்டிருப்பது. வெளியுலகில் மாற்றம் நிகழும் வேகத்துக்கு ஈடுகொடுத்து மனமும் அதன் தடத்தைப் பின்பற்றிச் செல்லுமானால் அது மாயையில் சிக்காது; உண்மையின்பால் உள்ளம் நிலைகொள்ளும்.
ஆனால் மனிதர்க்கு இது இயல்வதில்லை. மாற்றத்தால் நிகழும் உறழ்வை உன்னாது, உள்ளதை இல்லதென்றும் இல்லதை உள்ளதென்றும் மயங்கி மருள்கிறது மனம். மாற்றத்தை மறுத்தியங்கித் துன்பத்தில் சிக்கிக்கொள்கிறது.
இந்த மருட்சியில் இருந்து மீள்வது எப்படி? பேரண்டத்தின் நிகழ்வுப் பெருக்கம் நம் புலன்களை மோதி வெள்ளமாகச் சிந்தையுள் புகும்போது இது இயலக்கூடியதா?
விழிப்பாக – ஒருமுகமாக – இருந்தால் இது இயல்வதே!
‘ஒன்றே நினைந்திருத்தல்’ என்று அம்மை முன்வந்த பாடல்களில் கூறியது விழித்திருத்தலையும் தீயெண்ணங்களை விடுத்திருத்தலையுந்தான்.
ஆனால் மக்கள் கூட்டத்தின் இடையே வாழ்க்கைச்சுழலில் அகப்பட்டிருக்கிறபோது இந்த விழிப்பு கைகூடாது. புறவுலகத் தொந்தரவு நெஞ்சை விழித்திருக்க விடாது.
விழித்திருத்தல் வாய்ப்பதற்குத் தேவையானது தனித்திருத்தல்.
சிவனார் ஆகத்தில் (உடலில்) உள்ளபோது மட்டுமே நாகம் தீங்கற்ற ஒன்றாக இருப்பதுபோல, இப்படித் தனித்திருந்தும் விழித்திருந்தும் செம்மைப்படுத்தப்படும்போது மட்டுமே நெஞ்சம் உயர் நிலையை அடையும்; அல்லாக்கால் பிறவிச்சுழலில் கிடந்துழலும் என்பதை அம்மை வரும்பாடலில் உணர்த்துகிறார்.
பூண் ஆகத்தால் பொலிந்து, பொங்கு அழல்சேர் நஞ்சு உமிழும் நீள் நாகம் – பொங்கும் நெருப்பினைக்கொண்ட நஞ்சை உமிழும் நீண்ட நாகம் பொலிந்திருப்பது அது பூணப்பட்டிருக்கும் ஆகத்தினாலேயே – அஃதாவது சிவனார் தமது உடலில் அணிந்திருப்பதாலேயே!
ஆகம் – உடல்
அழல் – தீ
தானேயோர் நீள் நாகத்தானை நினைந்து – இத்தகைய நீண்ட நாகத்தை அணிந்திருக்கும் சிவனைத் தனது முயற்சியால் நினைந்து
தனி நெஞ்சம் தானே தன்னை உயக்கொள்வான் – தனித்திருக்கும் நெஞ்சம் தான் உய்வுற வேண்டும் என்று தன்னைத் தானே வழி நடத்தும்.
தானே பெருஞ்சேமஞ் செய்யும் – இவ்வாறு தனக்குத் தானே பெரு நன்மை செய்து கொள்ளும்
ஆல் – அசைச்சொல்
பாடல் 14
தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான்,
தானே பெருஞ்சேமஞ் செய்யுமால் – தானேயோர்
பூணாகத் தாற்பொலிந்து, பொங்கழல்சேர் நஞ்சுமிழும்
நீணாகத் தானை நினைந்து
இந்நூல் பற்றி இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன். பாராட்டத்தக்க நன் முயற்சி. வாழ்த்துகள்!