எரியாடும் எம்மானார்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 2)


முதலாம் பாடல் படிக்க: இங்கே செல்க


ஈசன் என்பதால் ஏத்தித் தொழுது பணிவதா?

அன்பன் என்ற உரிமையில் அவன் பாராமுகத்தைக் கடிந்து நோவதா?

காரைக்கால் அம்மையிடத்தில் இந்த நடுக்கம் தெரிகிறது.

இதற்கேற்பவே இரண்டாம் பாடலில் அவர் மொழியும் குழறுகிறது.

எப்போது இடர் தீர்ப்பாய் என்று இறைவனிடம் முதற்பாடலில் முறையிட்டார்.

ஆனால் இவன் இதற்குச் செவி சாயான் என்ற எண்ணமும் இடையிடையே தலை காட்டுகிறது.

ஈசனின் இணையடி எய்தும் நோன்பில் ஒருமுகமாகச் செல்ல வேண்டிய எண்ணம் பல திசைகளிலும் சிதறிப் படர்கிறது.

‘இடர் களையாரேனும்
எமக்கு இரங்காரேனும்
படரும் நெறி பணியாரேனும்’

‘தொடரும் நெறி – செல்லும் நெறி’ என்றெல்லாம் சொல்லாமல் ‘படரும் நெறி’ என்கிறார். பளிங்குத்தரையில் சிதறி விழுந்த நீர்ப்பெருக்கு ஒக்கும் அவர் நெஞ்சம். அடி நெடுக ஐயம் விரவுகிறது.

படரும் நெறியாவது யாதோ?

மரம் நெடிது வளர்வது. வானோக்கிய இலக்கில் வழாது தொடர்வது.

கொடி வளைந்து படர்வது. திசைக்கொரு கூறாய்க் கிடப்பது.

அவ்வண்ணம் அலைந்து படரும் நெறி – அல்லலுற்று உழலும் நெறி – வழி இங்கே குறிக்கப் பெறுகிறது.

எண்ணம் பல கூறுகளாகிக் கிடந்தாலும் எல்லாம் அவன் நிமித்தமாகவே படர்கின்றன.

ஈசனை நோக்கிய நெறியில் அவன் சொல்லை உவந்தேற்றுப் பணிதல் தானே முறைமை?

ஆனால் ‘என் நெறிக்கு இறைவர் பணியார்’ என்று முறையிடுகிறார்:

‘படரும் நெறி பணியாரேனும்’

இந்த முறைப்பாடுகளுக்கிடையில் ‘எனது ஐயம் பொய்யாகும். நான் நாடியது நடக்கும்’ என்ற நம்பிக்கையும் இழையோடுகிறது.

வெண்பாவின் முதற்பாதி முடிந்து இரண்டாம் பாதி தொடங்கும்போது ஈசனின் சுடர் உரு முன்வந்து நிற்கிறது. அம்மையின் நிலை குலைந்த எண்ணம் ஒருமுகமாகி ஆங்கண் உறுதி எழுகிறது.

‘சுடர் உருவில்
என்பு அறாக் கோலத்து எரி ஆடும் எம்மானார்க்கு, அவர்க்கு,
என் நெஞ்சு அன்பு அறாது’

யாம் அன்பு பூண்ட தலைவர் – எந்தை – எம்மானார் – எத்தகையவர்?

பொன்னணி சூடி மின்னும் மண்ணுலக வேந்தனா?

இல்லை. அவர் எலும்புகளைக் கோத்து மாலையாக அணிந்து கொண்டவர். எரிதழல் இடையே நடனம் ஆடுபவர். அதனாலேயே சுடர் உருவங் கொண்டவர். இந்த இயற்கையே அவருக்கு அணி.

அவர் சூடியிருக்கும் என்பு மாலை எப்படி இடை அறாமல் தொடுக்கப்பட்டிருக்கிறதோ, அப்படியே அவர் பால் யாம் கொண்ட அன்பும். எப்போதும் அறாதது.

அவர் இடர் களையாதபோதும் எமக்கு இரங்காதபோதும் படரும் நெறி பணியாதபோதும் இதுவே எம் நிலைப்பாடு.

பாடல் 2

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் – சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்நெஞ் சவர்க்கு. (2)


முதலாம் பாடல் படிக்க: இங்கே செல்க


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×