மைஞ்ஞான்ற கண்டம்: அற்புதத் திருவந்தாதி (பாடல் 1)

தத்தளிப்பு

கடந்த சில நாள்களாகக் காரைக்கால் அம்மையின் அற்புதத் திருவந்தாதி படித்துக்கொண்டிருக்கிறேன்.

அன்பின் தவிப்பை அம்மையைப் போலவும் ஆண்டாள் நாச்சியாரைப் போலவும் உன்மத்தமாகச் சொன்ன வேறு கவிகள் உளரா என்று தெரியவில்லை.

‘மைஞ்ஞான்ற கண்டம்’ என்கிறார் அம்மை.

அற்புதத் திருவந்தாதியின் முதற்பாடலில்

‘நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே’ என்று சிவனை விளிக்கிறார்.

ஞாலுதல் என்றால் தொங்குதல் என்று பொருள். அண்டவெளியில் அந்தரித்துத் தொங்கிக்கொண்டிருப்பதால் இந்த உலகுக்கு ஞாலம் என்று பெயர்.

அந்த ஞாலத்தின் சுழற்சியால் ஞால் – நாள் – ஞான்று உண்டாகிறது. எஞ்ஞான்று – எந்த நாள்?

‘ நிறந்திகழும் மை’ ஆகிய ஆலகால நஞ்சு அப்படியே ஈசன் மிடற்றில் தங்கி விட்டதே என்ற தவிப்பு அவருக்கு.

அன்பெனும் ஊற்று மனிதரிடத்தில் பிறந்த நாள் தொட்டே சுரக்கத் தொடங்கி விடுகிறது. ஆனால் மனத்தின் உயர்வு (பரிணாமம்) மொழி பயின்ற பிறகுதான் உருவாகிறது. ஒழுங்கு மிகும் மொழி வழியே எண்ணம் செம்மை பெறுகிறது. உள்ளத்தை உயர் நிலைக்கு எடுத்துச் செல்வதற்கு மொழி கருவியாகிறது.

இறைவன் மீது கொண்ட அன்பு இத்துணை உரமானது – அவனது செம்மை மிகுந்த அடிகளைச் சேர்ந்து இடர் தீர்ப்பதற்கான வேட்கை இத்துணை ஆழமானது – என்பதை அதை மொழியோசை வழி பாடலாகப் புனைந்துரைக்கும்போதே அவரால் உணர முடிகிறது.

அப்போதிற்றான் அவர் காதல் சிறக்கிறது.

‘பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம்

காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்’ என்று பாடத் தொடங்குகிறார்.

அற்புதத் திருவந்தாதி – பாடல் 1

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்

சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் – நிறந்திகழும்

மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே

எஞ்ஞான்று தீர்ப்ப(து) இடர்.

கருநீல நிறங்கொண்ட ஆலகால நஞ்சக்கறையை மிடற்றில் கொண்டவனே! வானோர் ஏத்தும் பிரானே.. பிறந்து மொழி கற்ற பிறகு உனது செம்மை பொருந்திய அடிகளையே சேர்ந்தேன். எனது துயரை எந்த நாளில் தீர்ப்பாய்? (‘ எந்த நாள் இடர் தீரும் என்று அறியேன். இவ்வாறு பரிதவிக்க விடுதல் நன்றோ’ என்பது உட்பொருளாம்).

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×