கூட்டை விடுத்ததுகாண் – உயிர்க்
குருவி பறந்தது காண்
பூட்டை உடைத்தெறியப் – பொன்
புதையல் கிடைத்தது காண்
ஊட்டி வளர்த்தவுடல் – பூதம்
ஒன்றிச் சமைத்தவுடல்
காட்டில் எரியுதுகாண் – இந்தக்
காயம் மறைந்தது காண்
சிதையில் கிடத்திவைத்த – என்றன்
தேகம் தனைநினைந்தேன்
கதையாய்ப்பின் கற்பனையாய் – வளர்த்த
கனாக்கள் தமைவியந்தேன்!
காலனைப் போலநிதம் – நண்பால்
கனிந்து தொடர்வதற்கே
ஏலுமோ இங்கெவர்க்கும் – சோரான்
என்றைக்கும் காத்திருப்பான்
பொய்யைக் களைந்தொழிமின் – உயர்
போதந் தெளிந்துநின்மின்
நைய உருக்குங்கொல்லன் – புது
நாளில் பல சமைப்பான்!
– மதுரன் தமிழவேள்