பொந்திகை அற்றிருப்பது (மன நிறைவு அற்றிருப்பது) நல்லதா?
தாழ் உணர்ச்சி மேவும் மனம் கொண்டு ‘எனக்கு அது கிட்டவில்லையே! இது கிடைக்கவில்லையே’ என்று தாவித் தாவி அங்கலாய்ப்பதும் மாய்வதும் துன்பத்தையே தரும்.
ஆனால் உயர்ந்த இலக்குகளின் பாலான வேட்கை – பொந்திகை இன்மை (மன நிறைவு இன்மை) – விரும்பத் தக்கது.
‘பெரிதினும் பெரிது கேள்’ என்பார் பாரதி.
Divine discontent என்ற தொடரைப் பயன்படுத்துவார் ஆங்கிலேய அறிஞர் பேர்னார்ட் ஷா.
மேலானவற்றை அவாவும் மனத்தின் உணர்வே அது.
அத்தகைய Divine discontent ஐ வரும்பாடலில் வெளிப்படுத்துகிறார் அம்மை.
நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம் புனைந்தும் அடிபொருந்த மாட்டார் – எப்போதும் சிவன் அடிகள் நினைந்திருந்து மிகு மலர்கள் தூவி வணங்கும் தேவர்கள் கூட அவன் அடிகளை அடைந்ததில்லை…
நினைந்திருந்து, மின்செய் வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்கு என் செய்வான் கொல்லோ இனி? – செவ்வானத்தில் மின்னல் தோன்றினாற்போன்ற சுடர்ப்பொலிவு கொண்ட சடையை உடையவனே! வேதப்பொருளாய் விளங்கும் பிரானே என்றெல்லாம் சொல்லால் மட்டும் தொழும் எனக்கு எவ்வாறு அருள் செய்வானோ!
பாடல் 15
நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம்
புனைந்தும் அடிபொருந்த மாட்டார் – நினைந்திருந்து
மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்
கென்செய்வான் கொல்லோ இனி.