- 3 நிமிட வாசிப்பு –\
மணிரத்னம் ஒரு epic filmmaker. எந்த அர்த்தத்தில் என்றால் அவர் சொல்ல விழைகிற கதைகள் காவியக் கருப்பொருள் கொண்டவை. தளபதி, ராவணா நேரடியாக இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்டு மறு ஆக்கம் செய்யப்பட்ட கதைகள். அக்னி நட்சத்திரத்தின் கார்த்திக், மௌன ராகத்தின் ரேவதி ஆகியோரின் மனக்கொந்தளிப்புகளும் கூட எனக்கு முறையே கர்ணன்/விதுரனையும் அம்பையையும் நினைவு படுத்துபவை. காவியச்சுவை கொண்ட கதைகளை நாடுகின்ற மனப்பாங்குதான் மணிரத்னத்துக்கும் ஜெயமோகனுக்கும் ஒத்திசைவைத் தந்திருக்கக் கூடும் என்றும் நான் எண்ணிக்கொள்வதுண்டு.
செக்கச் சிவந்த வானத்தைத் திரையரங்கில் முதன்முறையாகப் பார்த்தபோது, அது ஏதோ ஹாலிவூட் gangster movie ஒன்றையும் திராவிட இயக்கத்தின் குடும்ப அரசியலை மறைமுகமாகச் சாடும் மன நிலையையும் கலவையாக்கி எடுக்கப்பட்ட படம் போலத் தோன்றியது. இதில் இந்திய இதிகாச / காவியச் சுவை இல்லையா என்றும் எண்ணிப் பார்த்தேன்.
சற்று முன்னர் சிலப்பதிகாரம் எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். குன்றக் குறவர் கண்ட காட்சியைச் சாத்தனார் விளக்கிக்கூறும் பகுதியைப் படித்துக்கொண்டு போகும்போது திடீரெனத் தோன்றியது:
செ.சி.வானத்தில் வரும் அரவிந்த்சாமி – ஜோதிகா – அதிதி பாத்திரங்கள் கோவலன், கண்ணகி, மாதவி ஆகியோரின் பிரதிமைகள். கோவலனுக்கு நேர்ந்த அவலச்சாவுதான் அரவிந்த்சாமிக்கும் படத்தில் நேர்கிறது!
(டிசம்பர் 2020)