பனி வீழும் இமயத்தில் பரமன் வீற்றிருக்கிறான். அவன் கழுத்தில் சூடியிருப்பது கொன்றைமலர் மாலை அன்றோ? பனிக்கு வாடும் தன்மையன ஆயிற்றே அம்மலர்கள்!
ஒளிபொருந்திய அவன் நெற்றியிலே மூன்றாவதாக ஒரு தனிக்கண் இருக்கிறது.
எத்துணை விந்தையும் ஒண்மையும் பொருந்தியது அவன் தோற்றம்!
அத்தகைய பெம்மானின் தகைமை என்னவென்று சொல்கிறேன், கேளுங்கள் என்கிறார் காரைக்கால் அம்மை.
அதுவே பிரான் ஆம் ஆறு – ஒன்றே நினைந்திருந்து ஒன்றே துணிந்து ஒழிந்து ஒன்றே உள்ளத்தினுள் அடைக்கும் அம்முறையே (போன பாடலிற் சொல்லப்பட்டது) யாம் சிவம் ஆவதற்கான வழி. இதையே எட்டாம் பாடலிலும் அம்மை அறிவுறுத்துவது காண்க.
அதுவே ஆட்கொள்ளும் ஆறும் – சிவன் எம்மை ஆட்கொள்ளும் வழியும் அதுவே
இனி அறிந்தோம் ஆனால் – இனிமேல் இதை அறிந்தோமே ஆனால்
பனிக்கு அணங்கு கண்ணியார் – பனிக்கு வாடும் கொன்றை மலர்களை மாலையாகச் சூடியவர் (அணங்குதல் = வாடுதல். விரிதல் என்னும் பொருளும் உளது)
ஒண் நுதலின் மேல் ஓர் தனிக்கண் அங்கு வைத்தார் – ஒளி பொருந்திய கண்ணின்மேல் தனிக்கண் அங்கு வைத்தவர்
தகவு அதுவே – அவரது தகைமை – சிறப்பு – அதுவே.
பாடல் 12
அதுவே பிரான் ஆமா(று) ஆட்கொள்ளு மாறும்
அதுவே; இனியறிந்தோ மானால் – அதுவே
பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர்
தனிக்கணங்கு வைத்தார் தகவு.