ஈழத்துயர்: ஆறாத அனல் சுட்ட காயம்

ஆறாத அனல்சுட்ட காயம் – நம்
அன்னை நிலத்தினில் எந்நாளில் தேயும்?
ஆறாத அனல்சுட்ட காயம் – நம்
அன்னை நிலத்தினில் எந்நாளில் தேயும்?

கந்தகம் படிந்த வெந்தணல் நதியில்
கரைந்ததோ எங்களின் கனவு
சந்ததம் நெஞ்சில் சஞ்சலம் விஞ்சித்
தளருமோ விடியலின் நினைவு?

(ஆறாத…)

மானுட நீதி தாழுதல் கண்டு
வையகம் விழித்துயிர் பெறுமோ?
ஊனிடர் பட்டும் உளம்குலை வுற்றும்
உழல்பவர் விழித் துயர் அறுமோ?

(ஆறாத)

பேய்க்களம் ஆடித் தீர்த்தவர் செய்த‌
பிழைகளைப் பொறுக்குமோ உலகம்?
ஆய்க்கினை நீள இருள்வெளி சூழ‌
அரண்டிடும் நிலையென்று விலகும்?

(ஆறாத)

எத்தனை எத்தனை நிணப்புதை குழிகள்…
எரிந்தன சரிந்தன கோபுரங்கள்
புத்தனின் பெயரால் இனப்படு கொலையோ?
பூமியே! நீதிக்கு ஈழம் ஓர் உலையோ?

(ஆறாத)

(மே 2011)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×