காணொளியா? காணொலியா?

வினைத்தொகை:

காலங்கலத்தல், காலங்கடத்தல், காலங்கரத்தல் – தமிழின் இலக்கணமும் மெய்யியலும் – சில சிந்தனைகள்

(முகநூலில் எழுதியவற்றின் தொகுப்பு)

1.

வீடியோ (video) என்பதற்கான சரியான தமிழ்ச்சொல் எது? காணொளியா? காணொலியா?

காணொளி என்பதே சரி. காணொலி என்று எழுதற்க.

காண் ஒளி – வினைத்தொகை. முக்காலமும் உணர்த்தும் / காலத்தை மறைக்கும். (கண்ட, காண்கின்ற, காணும் ஒளி). இக்காரணம் பற்றி வினைத்தொகையைக் காலங்கரந்த பெயரெச்சம் என்றும் இலக்கணிகள் சொல்வர். கரத்தல் – மறைத்தல்.

அழிபசி (அற்றார் அழிபசி தீர்த்தல் – திருக்குறள்)

(முன்)அறிதெய்வம் ( ஒளவை – கொன்றை வேந்தன்)

ஊறுகாய்

விடுகதை

இவை போன்றதே காண் ஒளியும்.

ஒலியைக் காண முடியாது. எனவே காணொலி எனல் தவறு (ஒலியைக் காணுதல், ஒளியைக் கேட்டல் முதலான தொடர்பறு புலன் நிலையை நரம்பியலாளர் Synesthesia என்பர்.)

2.

‘காண்பதும் ஒலிப்பதும் = காணொலி’ எனல் சரியா?

தவறு. அவ்வகையில் காண், ஒலி இரண்டும் விளிச்சொற்களாகின்றன – ஒருவரை நோக்கிச் சொல்வதாக அமைகின்றன (வா,போ என்பன போல).

பொதுவாக இரண்டு விளிச்சொற்களைச் சேர்த்துப் புதுச்சொல் உருவாக்குவதில்லை.

புத்தகத்துக்கு ‘புரட்டு-படி’ என்று பெயர் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். (புரள்படி என்பது வேண்டுமானால் பொருத்தமானதாக இருக்கலாம் – ‘படி’ பெயர்ச்சொல்லாக வரும்போது)

இன்னொன்று, வீடியோவைப் பொறுத்தவரைக்கும் காண்பது பார்வையாளரிடத்தில் நிகழ்கிறது. ஒலிப்பது வீடியோவில் நிகழ்கிறது.

பார்வையாளரை மையப்படுத்திச் சிந்திப்பதென்றால் காண்பதும் கேட்பதுமே அவர் தொழில்… வீடியோவை மையப்படுத்திச் சிந்திப்பதென்றால் காட்டுவதும் ஒலிப்பதுமே அதன் தொழில்.

ஒலி இல்லாத வீடியோ இருக்கலாம். ஆனால் ஒளி இன்றி அது அமையாது. எனவே ஒளிக்கே முதன்மை.

இரண்டையும் இணைத்தொரு சொல் வேண்டும் என்றால் ஒலியொளி என்று உம்மைத்தொகையாகச் சொல்வதே பொருந்தும் 

3.

எனினும் ‘ஒலியொளி’யைவிடக் காணொளியே சிறந்த தெரிவு. காரணங்கள்:

காணொளி, காணொலி என்ற இரண்டு பயன்பாடும் வெகுவாகப் பரவி விட்டன.

இந்த நிலையில், வழு நீக்கி ‘காணொளி’ என்று பயன்படுத்துவதே தகும்.

ஏற்கனவே வழக்கிலுள்ள ‘வானொலி’ (Radio) என்ற சொல்லோடு இயைந்தொலிப்பது இச்சொல் நிலைபெற்று விட்டதற்கு ஒரு காரணம் (காணொலி என்ற வழு உண்டாகவும் இதுவே காரணம்).

வான் ஒலி – வேற்றுமைத்தொகை.

ஒளி, ஒலி, ஒலியாலான மொழி முதலானவை புலனுணர்வு மூலங்கள் (sensory objects). நிகழும்போது உணர்வாகவும் நிகழ்ந்த பிறகு நினைவாகவும் நிகழும் வரை கற்பனையாகவும் மனிதர் அகத்தில் திரிபுறுபவை.

இப்படியான காலங்கலந்த, காலங்கடந்த, காலங்கரந்த – நிலையை வினைத்தொகை குறிக்கிறது. தமிழ் இலக்கண மரபின் மெய்யியல் ஆழமும் செழுமையும் இதன்வழி புலப்படுகிறது.

ஒளி போலவே புலனுணர்வு மூலமாக உள்ள மொழி, இலக்கணத்தில் பல இடங்களில் வினைத்தொகையாக வருவது காண்க:

வருமொழி (புணர்ச்சி இலக்கணம்: இரு சொற்கள் புணரும்போது இரண்டாவதாக வரு(ம்) சொல்)

நிலைமொழி (புணர்ச்சியில் முதலாவதாக உள்ள சொல்)

தொடர்மொழி (தனிமொழி/தனிச்சொல் பல தொடர்ந்து வருவது)

தனிமொழி (தனிச்சொல்)

4.

கேள்வி: இப்படியெல்லாம் விளக்கங்களை அடுக்காமல் ‘காணொலி’ என்பதை இடுகுறிப்பெயராகக் கொள்ளலாமே?

பதில்: இடுகுறி என்ற பெயர் உண்டாக என்ன காரணம் என்று சிந்தித்தோம் என்றால் இப்படி எண்ணத் தலைப்பட மாட்டோம்.

இடுகுறி – முக்காலத்தையும் உணர்த்தும் வினைத்தொகை.

(காரணம் இன்றி) ஒன்றுக்கு இட்ட குறி, இடுகின்ற குறி, இடும் குறி – இடுகுறி.

அவ்வகையில் இடுகுறி என்பதே ஒரு காரணப்பெயர் தான். காரணமற்றவற்றைக் குறிக்கும் காரணப்பெயர்.

வீடியோ என்று சொல்லாமல் காணொலி என்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால், வேற்றுமொழியைத் தவிர்த்துத் தமிழைத் தேர்கிறீர்கள் என்பதே காரணம். அந்தக் காரணம் வழுவின்றி இருப்பது இன்றியமையாதது.

1 thought on “காணொளியா? காணொலியா?”

  1. அசத்தல் ஐயா! மிக மிகச் சிறப்பான விளக்கங்கள்! குறிப்பாக, வினைத்தொகைக்கு நீங்கள் தந்த விளக்கம் இதுவரை நான் எங்கும் படிக்காதது. பொதுவாக வினைத்தொகை பற்றி விளக்கும் அனைவரும் அது மூன்று காலத்தையும் குறிக்கும் சொல் என்றுதான் சொல்வார்கள். ஆனால் இது மூன்று காலத்துக்கும் பொதுவான சொல் என்பதே என் கருத்து. நீங்கள் அதைக் ‘காலங்கலந்த, காலங்கடந்த, காலங்கரந்த நிலை’ என்று குறிப்பிட்டிருப்பது துல்லியமாகப் பொருந்துகிறது. மிக அழகாகத் தமிழ் பற்றி எழுதுகிறீர்கள்! மிக்க நன்றி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×