தமிழணங்கு 

கரிய நிறத்தவள் காண் எங்கள் அன்னை – அடர்

காட்டில் உலவிக் களி நடம் புரிவாள்

அரிய திறத்தவள் காண் எங்கள் அன்னை – உடல்

ஆவிக்(கு) அமுதென அன்பைச் சொரிவாள்

ஐந்து திணைகளிற் செழித்தவள் அன்னை – தன்

ஆதி மனிதர் கனவுருக் கொண்டாள்

நைந்து மடிந்திடும் மொழிகளின் நடுவில் – என்றும்

நலிவி லாத பெருநிலை கண்டாள்

உயிரொலி ஐந்தும் மந்திரம் ஆகும் – அவை

உடலொடு சேரச் சன்னதம் தோன்றும்

இயலிசை நாடகம் ஈங்கிவை மூன்றும் –  நெஞ்சின்

இன்னல் அகற்றி இறை நிலை ஊன்றும்

ஏப்ரல் 10, 2022 – ஓவியர் சந்தோஷ் நாராயணன் கரு நிறத்தவளாகத் தமிழணங்கை வரைந்ததை ஒட்டிச் சமூக வலைத்தளங்களில் எழுந்த விவாதங்களின் பின்னணியில் எழுதிய சிந்துப்பாட்டு. பாரதியின் ‘பேயவள் காண் எங்கள் அன்னை’ கவிதைக்கான தூண்டல்.

1 thought on “தமிழணங்கு ”

  1. பவானி*சா

    தலைமுறைகள் பல கடந்தும் பைந்தமிழ் அறிந்து
    செந்தமிழில் வாழ்த்த மண்ணின் மைந்தர்களைப் பெற்ற தீந்தமிழாள் வாழ்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×