பாரதியின் ஆரியச்சாய்வும் பார்ப்பன மேட்டிமையும்: பழியுரை மறுத்தல்

சமூக வலைத்தளங்களில் நிகழ்ந்த உரையாடல்களில் கூறிவை – அகழ் ஆய்வின்றி விரைந்தெழுதித் தொகுத்தவை

பழியுரை 1: 

பாரதி ‘ஆரிய பூமி, ஆரிய ராணி’ என்றெல்லாம் பாடினான். எனவே அவன் தமிழருக்கு எதிரானவன்.

பழியுரை 2:

கடலூரில் சிறைவைக்கப்பட்ட சமயம் ஆங்கிலேய ஆளுனருக்கு பாரதி எழுதிய கடிதத்தில் அவனது பார்ப்பன மேட்டிமை தெரிகிறது.

மறுப்பு:

குருஞான சம்பந்தர் ‘சொக்கநாத வெண்பா’ என்றொரு நூல் புனைந்துள்ளார். 94 நேரிசை வெண்பாக்கள் அதன்கண் இடம்பெற்றுள்ளன. வானுலகோர் போற்றும் தாமரைப் பாதங்களைக் கொண்டவனே என்று முதலாவது பாடலில் சொக்கநாதனைப் போற்ற வேண்டும் என்பது அவரெண்ணம். சமற்கிருதத்தில் இருந்து பெற்றுத் தமிழ் தனதாக்கிக்கொண்ட – தாமரை மலரைக் குறிக்கும் – ஒரு சொல்லைப் பாடலின் முதற்சீரில் வைக்கிறார்.

பொருள் அறியாதோர், ‘என்னடா இவர், தமிழில் மிக இழிந்த வார்த்தையாகப் புழங்குமொன்றைப் பாட்டின் முதற்சொல்லாகக் கொண்டு வந்து வைக்கிறாரே’ என்பர். 

நாம் எல்லோரும் எவ்வழிப் பிறந்தோமோ அக்கருவாயில் தாந்திரீக மரபில் பேரண்டப் பிறப்பின் குறியீடாகத் தொழுது போற்றப்படுகிறது. தாமரைக்கு உவமிக்கப்படுகிறது. தமிழில் அஃதொரு கெட்டவார்த்தை. ‘எத்தனைபேர் நட்டகுழி’ என்று இகழ்ந்து பேசும் பட்டினத்தார், அருணகிரிநாதர் ஒத்தோரைக் கொண்ட இன்னொரு மரபும் உளது. 

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன என்று பேரண்டத்தின் பெருக்கத்தைக் குறிப்பார் மாணிக்கவாசகர். அண்டத்தைப் புலன்வழி உணர்ந்து உருவாகும் மனிதர்தம் அறிவும் அப்பேர்ப்பட்டதே – பல்கி விரிவது; ஒருமை காண்பது அரிது.

மொழிப்பொருள் காரணம் விழிப்பத் தோன்றா – தொல்காப்பியர்

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு – திருவள்ளுவர். 

எமது உள்ளத்தின் விரிவுக்கேற்பவே பொருளும் தோன்றும். 

ஆரியம் என்பதைத் தூய்தமிழ் வார்த்தையாகவுங் கொள்ளலாம் என்பதை அண்ணன் தமிழாறு தங்கதுரை அவர்கள் விளக்கினார்கள் (வாட்ஸ் அப் குழுமம் ஒன்றில் நிகழ்ந்த உரையாடல்).

அச்சொல்லின் வேர் எங்கிருந்து பிறந்தது என்பதை மொழியியலாளரே கூற முடியும். எனினும் ‘ஆரிய’ என்ற அடைமொழிக்கு உயர்வு, மேன்மை, மீ நிலை, செழுமை முதலானவற்றைக் குறிக்கும் பொருள் பாரத மரபில் நெடுங்காலமாக நிலைபெற்றுள்ளது என்பது ஐயத்துக்கு அப்பாற்பட்ட ஒன்று.   

புத்தரின் தம்மம் ஆரிய தம்மம் என்றே அழைக்கப்பட்டது https://en.wikipedia.org/wiki/Arya_(Buddhism)

இதைக்கேட்டதும், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எமக்கெதிராகச் செயல்புரிந்த தமிழ் இனப்பகைவர் புத்தர் என்று போரிடக் கிளம்பும் ஒரு கும்பலையும் என் மனக்கண்ணில் காண முடிகிறது. 

ஐயா, பொறுத்தமர்க! சாதியப் பிளவால் சழக்குற்றிருந்த சமூகத்திடையே புத்தர் தோற்றுவித்த தம்ம சங்கத்தில் மண்ணாண்ட மாமன்னரும் இருந்தனர்; மனித வாழ்வு மறுக்கப்பட்ட ஸ்வஸ்தியைப் போன்ற “தீண்டத்தகாத” குலத்துதித்தவரும் இருந்தனர். தம்மம் அனைவருக்குமானதே.  இந்த ‘அமைதிப் புரட்சி’யைத்தான் ஏற்றத் தாழ்வு பாராட்டிய சனாதனிகளால் ஏற்க முடியாதிருந்தது. தம்மம் தமிழ் நிலத்திலும் தழைத்தோங்கிய ஒரு காலம் இருந்தது. 

உள்ள அறிவனைத்திலும் உயர் அறிவு என்றபடியால் அது ஆரிய தம்மம். 

பாரதியும் ‘ஆரியம்’ என்ற சொல்லை இதே பொருளிலேயே ஆண்டான். ஆரிய பூமி என்றால் உயர்வுடைய பூமி. தான் பிறந்த பூமி தாழ்வுகள் நீங்கி உயர்வெய்த வேண்டும் என்று பாரதி கனாக்கண்டான் என்பதில் ஐயமில்லை. 

ஆரியம் x திராவிடம் என்ற இனக்குழுமம்சார் முரண் பாரதியின் காலத்துக்குப் பிறகு முன்னிலைக்கு வந்த ஒன்று. 

*** 

கடலூரில் சிறைவைக்கப்பட்டபோது பாரதி ஆங்கிலேய ஆளுனருக்கு எழுதிய கடிதம் தொடர்பாக இன்னொரு பிணக்கு ஓடிக்கொண்டிருக்கிறது. 

பிணக்குக்கு உள்ளாகியிருக்கும் பாரதியின் சொற்கள் இவைதாம்:

“I have been detained and placed in the Cuddalore District Jail under conditions.. … which are altogether disagreeable to a man of my birth and status

‘என்னைப் போன்ற ஒருவனின் பிறப்புக்கும் தகுதிக்கும் கிஞ்சித்தும் ஒப்பாய் அமையாத சூழல் கொண்ட சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன்’ என்று எழுதுகிறான் பாரதி. மட்ராஸ் ஆளுனராக இருந்த வெள்ளைக்காரத்துரையை அக்கடிதத்தில் குழைந்து போற்றவும் தவறவில்லை.

பாரதி மீது தீர்ப்பளிக்கும் முன்னதாக இந்நிகழ்வின் பின்னணியைப் பார்ப்போம்.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான தனது அரசியல் செயற்பாடுகள் காரணமாகத் தான் நெஞ்சிலேந்திச் சுமந்த தாய்த்தமிழ் நிலத்தில் வாழ முடியாத நிலை பாரதிக்கு. பிரஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த புதுவையில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வருகிறான். 

பாரதியின் இறுதிக்காலம்’ (காலச்சுவடு பதிப்பகம், 2014, பக்கம் 13) நூலில் பேரா ய. மணிகண்டன் பின்வருமாறு எழுதுகிறார்: 

பாரதியின் வாழ்க்கை வரலாற்றில் எட்டயபுர வாசம், காசி வாசம், புதுவை வாசம், கடையம் வாசம், சென்னை வாசம் ஆகியன குறிப்பிடத்தக்க கட்டங்களாக அமைகின்றன. சென்னை வாசம் வாழ்வின் தொடக்கத்திலும் இறுதியிலுமாக இருமுறை நிகழ்கின்றது.

புதுவைவாசக் காலத்தில் அவ்வப்போது பொருளியல் நெருக்கடிகளும் இரகசியப் போலீசாரின் கண்காணிப்பு உள்ளிட்ட சூழல்களும் இடையூறுகளாய் அமைந்தபோதிலும், பாரதியின் படைப்புவாழ்வில் புதுவைவாசம் ஒரு பொற்கால வாழ்க்கைப் பகுதியாகவே முகங்காட்டுகின்றது. குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய காலத்தை வென்ற படைப்புகளும் அற்புதமான கவிதைகளும் அங்கேதான் தோற்றம் பெற்றன.

எனினும் புதுவை வாழ்விலிருந்து விடுதலை பெற்று, சென்னைக்கும் எட்டயபுரத்திற்கும் கடையத்திற்கும் செல்ல அவர் மனம் துடித்துக்கொண்டிருந்தது. சுதந்திர புருஷனாக எல்லா இடங்களிலும் உலாவ அவர் உள்ளம் அங்காந்திருந்தது. பாரதியின் மறைவிற்குப்பின் செல்லம்மா பாரதி இதனைக் குறித்துப் பின்வருமாறு எழுதியிருந்தார்;

தேசப்பிரஷ்டமானார். புதுவையில் தேசபக்தி விரதத்தைப் பல விதமாக அனுஷ்டித்தார். திரும்ப வந்து தந்நாட்டை ஒருமுறை பார்க்க வேண்டுமென்ற அவா அதிகரித்தது. அதற்காகச் சில நிபந்தனைகளை ஒப்புக்கொண்டார்.

இச்சூழலில் ஆங்கிலேய அதிகாரிகளிடம் கோரிய ஒப்புதல் கிட்டாத நிலையில் தன்னிச்சையாகத் திடீரென பாரதி சென்னை கிளம்புகிறான். கடலூரில்  வைத்துக் கைது செய்யப்படுகிறான். மோசமான நிலை சூழ்ந்த சிறையில் அடைக்கப்படுகிறான்.  விடுவிக்க வேண்டி மட்ராஸ் ஆளுனருக்கு எழுதிய கடிதத்திலேயே மேற்கண்டவாறு சொல்கிறான் பாரதி.

இதில் “.. altogether disagreeable to a man of my birth and status” என்ற வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு அது பாரதியின் பார்ப்பன மேட்டிமையைக் காட்டுகிறது என்று ஆர்ப்பரிக்கிறார்கள் சிலர். 

ஜாதி மதங்களைப் பாரோம் – உயர் – ஜன்மம் இத் தேசத்தில் எய்தினராயின் – வேதிய ராயினும் ஒன்றே – அன்றி வேறு குலத்தவராயினும் ஒன்றே” என்று பாடியவன் பாரதி.

“சூத்திரனுக்கொரு நீதி – தண்டச் – சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி – சாத்திரம் சொல்லிடுமாயின் – அது – சாத்திரமன்று சதியென்று கண்டோம்” என்றும் முழங்கினான் அவன்.

“எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்று இறும்பூது எய்தியவனும் அவனே.  

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று யாவருக்கும் சம நிலை கோரினானே ஒழியத் தன்னை ஒருபோதும் தாழ்வாக எண்ணினான் அல்லன். அப்படி அவன் எண்ண வேண்டிய தேவையும் இல்லை.

தமிழ் நிலம் ஈன்றெடுத்த ஒரு மகாகவி அப்படி எண்ண நேர்ந்தால் அதைவிடத் தமிழுக்கு வேறென்ன பேரிழுக்கு நேர்ந்துவிட முடியும்? 

பாரதியின் மாட்சிமையை ஏற்கத் தவறுகிறோம் என்றால் – தலையில் ஏத்திக் கொண்டாடத் தவறுகிறோம் என்றால் – அது தமிழரது மடமைக்கான சான்றாக அமையுமே தவிர, அவனுக்கு அதனால் யாதொரு குறையுமில்லை.

வேடிக்கை என்னவென்றால், அதிகாரத்தின் முன் பாரதி பணிந்து பேச முயன்றபோதெல்லாம் அவனுக்குள் இருந்த கவித்துவச் செருக்கு இன்னொரு புறமாக வந்து நின்று பல்லிளித்துச் சாட்டையடி கொடுத்திருக்கிறது – அதனால் அதிகாரத்திடம் பாரதி வேண்டி நின்ற உதவி கிட்டாமல் போயிருக்கிறது – என்பதே உண்மை. 

உதவி கேட்டு எட்டயபுரத்து சமஸ்தானத்துக்கு பாரதி எழுதிய ஓலைத்தூக்கு இன்னோர் எடுத்துக்காட்டு. பொருளுதவி வேண்டி இரந்து நிற்கும் ஏழைப்புலவன் மன்னனை அல்லவா புகழ வேண்டும்? இவன் தன்னைப் புகழ்ந்து கொள்கிறான்: 

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்

  தமிழ்மொழியைப் புகழி லேற்றும்

கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்

  வசையென்னாற் கழிந்த தன்றே!

“சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது,

  சொற்புதிது, சோதி மிக்க

நவகவிதை, எந்நாளும் அழியாத

  மகாகவிதை” என்று நன்கு 

இன்னொரு பாட்டில், ‘பாரி பிறந்த பழந்தமிழ் நாட்டில் ஆட்சி செய்யும் மன்னன் அல்லனோ நீ? கவிஞர் உன்னைக் காண வந்தால் நேரில் வந்து வழிபட்டு நிற்க வேண்டியது உனது கடமை அல்லவா’ என்று பாடம் எடுக்கிறான். என்னே குசும்பு! 

இந்தக் கவிதைக் குசும்பைக் கண்டுகொண்ட ஆட்சி அதிகாரம் எப்போதும் பாரதிக்குச் செவிசாய்த்ததில்லை என்பதே உண்மை. 

**

கடலூர் சிறைவாசத்தால் ஏற்பட்ட மனத்துன்பம், ஆங்கிலேய அதிகாரியிடம் பணிந்து பேச வேண்டியதாய்ப்போய்விட்டதே என்ற குமுறல் சிறையில் இருந்து விடுதலையான பிறகும் பாரதியை வதைத்தது. ‘பார்மீது நான் சாகா திருப்பேன் கண்டீர்’ என்று பாடிய கவிஞன் அதன்பிறகு ஓராண்டுக்குள் மடிந்து போனான். யானை தாக்கிய சம்பவம் பாரதியின் மரணத்துக்கான காரணமாகச் சொல்லப்பட்டாலும் அதற்கு முன் நிகழ்ந்த சிறைவாசம் பெரும் மனக்குலைவை ஏற்படுத்தி விட்டதை மேற்சொன்ன நூல் (பாரதியின் இறுதிக்காலம்) பதிவு செய்கிறது. 

இலட்சியங்களை நோக்கி வானோக்கி உந்தப் பெறுவது கவிதை மனம். மனித உடலின் கசடுகளும் இச்சைகளும் நம்மை நிலத்தோடு பிணித்து வைத்திருக்கின்றன. இவை இரண்டுக்கும் இடையிலான போராட்டம்தான் கவியினது வாழ்வு. அத்தகு வாழ்வின் பேருருவாகத் திகழ்ந்தவன் பாரதி.

இந்த விளக்கத்துக்குப் பிறகும் ‘பாரதி வெள்ளைக்காரத் துரையிடம் பணிந்து பேசிவிட்டான்’ என்பதைக் குற்றச்சாட்டாக முன்வைப்பீர்கள் என்றால், 

‘இப்படியான கடிதங்கள் அரசியற் செயற்பாட்டின் ஒரு பகுதி. எல்லாம் இழந்து தங்கள் தாய் நாட்டை  நீங்கி வந்த ஈழத்தமிழ் ஏதிலிகள் இன்னமும் இப்படித்தான் மேலை நாடுகளில் வெள்ளைக்காரத்துரைகளுக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்; பாரதியும் புதுவையில் அரசியல் ஏதிலியாகத்தான் இருந்தான்’ என்றெல்லாம் பலவகையில் விளக்கலாம் தான்.

இருந்தாலும் நான் சொல்ல வருவதைப் புரிந்துகொள்ள இன்னுமோர் எளிமையான வழி இருக்கிறது: 

மேரி மக்தலீனை நோக்கிக் கல்லெறிய வந்தவர்களிடம், “உங்களில் யார் பாவம் செய்யாதவரோ அவர் முதற்கல்லை வீசுங்கள்” என்றார் யேசு பிரான். 

அதேவழியில், பாரதியை இழித்துப் பேசும்முன் நீங்கள் அதிகாரத்தின் முன் பணிந்து நிற்க வேண்டி வந்த – அதிகாரத்தைப் புகழ்ந்து போற்ற வேண்டி வந்த சந்தர்ப்பங்களை – ஒருமுறை நினைத்துப் பாருங்கள். மற்றவர்களிடத்தில் சொல்ல வேண்டும் என்பதில்லை. உங்களை நீங்களே நேர்மையாகக் கேட்டுப் பாருங்கள். அஃதுங்கள் பணியிடமாக இருக்கலாம். தொழில் வாய்ப்பு வேண்டியாக இருக்கலாம். அரசியல் மேடையிலாக இருக்கலாம்.

அதேபோல, ‘நாம் ஆர்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்’ என்ற உணர்வோடு எல்லாத்தளைகளும் நீங்கிக் கட்டற்ற நிலையில் மனம் சஞ்சரித்த பொழுதுகளையும் நினைத்துப்பாருங்கள்.

எது மிகையாக இருக்கிறது? மேலது மிகையாக இருந்தால் நீங்கள் எல்லோரையும் போல அல்லாடும் மனிதர். கீழது மிகையாக இருந்தால் நீங்கள் மகாகவி. இரண்டுமற்றிருந்தால் பாறாங்கல். பாரதி மகாகவி.

குறையுள்ளோர் கண்ணுக்கு வேசியாகத் தெரிந்த மேரி மக்தலீனா உண்மையில் ஞானி என்பது முற்றுமுணர்ந்த யேசு பிரானுக்கு மட்டுமே தெரிந்தது. அவளை அவர் முதன்மைச் சீடையாகவும் ஞானத் துணையாகவும் கொண்டார்.

பாரதி இதனையும் பாடத் தவறவில்லை: 

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;

எழுந்து யிர்த்தனன் நாள்ஒரு மூன்றில்;

நேச மாமரி யாமக்த லேனா

நேரி லேயிந்தச் செய்தியைக் கண்டாள்’

..

அன்பு காண்மரி யாமக்த லேனா,

ஆவி காணுதிர் யேசுகி றிஸ்து

முன்பு தீமை வடிவினைக் கொன்றால்

மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்.

பொன்பொ லிந்த முகத்தினிற் கண்டே,

போற்று வாள்அந்த நல்லுயிர் தன்னை,

அன்பெ னும்மரி யாமக்த லேனா.

ஆகா! சாலப் பெருங்களி யிஃதே

..

இன்னொன்று:

பாரதி ‘ஆரிய பூமி’ என்று பாடினான் என்பதனால் தமிழருக்கு எதிரானவன் என்போர் தர்க்கப்படி அவனை வேறுபல வகைகளிலும் நிறுவலாம்:

மேற்கண்ட பாடலில் ‘யேசுவை ஈசன் என்கிறான் – எனவே இவன் கிறிஸ்தவக் கைக்கூலி’.

‘சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெருஞ்சோதி அல்லா அல்லா அல்லா’ என்கிறான் எனவே இவன் அரபு நாட்டு ஏஜண்டு.

சோவியத் புரட்சியைப் பாடுகிறான். எனவே இவனொரு கம்யூனிஸ்டு.  

இன்னும் பல வகையாய்…

‘அணிசெய் காவியம் ஆயிரம் கற்பினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம்  காணிகிலார்’ கைகளில் விழியிழந்தோர் தடவிய வேழமாய் அவன் கவிதை சிக்கினால் நொந்துபடுமாறு ஆடல் நிகழ்த்திப்

பின், 

‘விழிபெற்றுப் பதவி கொள்வார்’ கைகளில் கிட்டினால் தெள்ளுற்ற தமிழமுது அஃதென்று உணருமாறும் செய்யும் ஆற்றல் உள்ளபடியாற்றான் அவன் பெருங்கவி.

**

இனி, பாரதி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவனா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. 

‘ஈனப் பறையர்களேனும்’ என்றொரு பாடலில் பாரதி உம் கொட்டி இழுக்கும்போது மனம் துணுக்குறும். ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்று நீர்தானே பாடினீர்? பிறகு எங்கிருந்து வருகிறது ஈனம்? அது பறையரிடம் உளதா? அல்லது உம் உளத்தின் கண் உளதா? என்று கேட்கத் தோன்றும். 

இது பாரதியின் சாதியச் சாய்வைக் காட்டுகிறதா என்றால் ஆம் காட்டுகிறது என்பதே பதில். வைரஸ் நீக்கப்பட்டு, பிழைகள் முற்றுமாகக் களையப்பட்டு நிறுவப்பட்ட கம்ப்யூட்டர் புரோகிராம் (கணினி நிரல்மொழி) அல்லன் பாரதி. அப்படி நிறை நிலையுள்ளவனாக அவன் இருக்க வேண்டுமென்ற பல்லோர் எதிர்பார்ப்பே அவனது மாட்சியைச் சொல்லிவிடுகிறது. தனது சூழலை உன்னிப்பாகக் கவனித்துக் கற்றுக் கற்றுத் தன்னைச் செதுக்கிக்கொண்டவன் அவன். எடுத்துக்காட்டாகக் கொண்டு எல்லோரும் பின்பற்றக் கூடிய தகை வாய்ந்தவன்.

பிற்சேர்க்கை:

‘ஈனப் பறையர்க ளேனும்’ பாடல் அடி தொடர்பில் பேராசிரியர் ய. மணிகண்டன் அவர்கள் அகழ்ந்தாய்ந்து வெளிக்கொண்டு வந்திருக்கும் அருஞ்செய்திகள் புதுவெளிச்சம் பாய்ச்சுகின்றன. பாரதி தனது தவற்றை உணர்ந்து திருத்திக்கொண்டதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் ‘காலச்சுவடு’ இதழில் வெளிவந்த பேரா ய. மண்கண்டனது கட்டுரையை இங்கே காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×