மொழி பற்றிய சில சிந்தனைகள்

  • 3 நிமிட வாசிப்பு \

ஜூன் 13, 2021 முகநூலில் எழுதியது:

தமிழனாக இருப்பதொன்றே பெருமை என்று நான் நினைப்பதில்லை. தமிழ் பற்றிய எனது பெருமிதத்துக்கு அந்த மொழிவழி சிந்திக்கும்தோறும் அடைகிற அக அனுபவத்தின் செழுமை காரணமாகிறது.

அதனது விரிவும் ஆழமும் ஆழிபோல் மிகுந்திருக்க, என்னால் அறிந்து கொள்ள முடிவது கடுகளவு என்பதை உணரும்போது உருவாகும் வியப்பால் பெருகுவது அப் பெருமிதமும் உடன்வரும் உவகையும்.

அதன் ஆழத்தையும் விரிவையும் உணரும் பொருட்டு ஒரு துரும்பைத்தானும் கிள்ளிப்போடாமல் தமிழன் தமிழன் என்று மார்தட்டுவதால் நன்மை விளையாது. இதேபோல, உலகில் தமிழொன்றுதான் சிறந்தது என்று நாம் கிணற்றுத் தவளைகளாக எண்ணிக்கொண்டிருப்பதும் தேவை கிடையாது.

பல்லாயிர ஆண்டு காலம் பெருந்தொகை மக்களிடையே பல்விதப் பண்பாடுகளையும் உள்வாங்கி உயிர்கொண்டு நிலைத்து வாழும் ஒரு மொழி எத்தகைய மேன்மையுடன் இருக்கும் என்பதற்குத் தமிழ் சிறந்தவோர் எடுத்துக்காட்டு. ஒரு மொழியை நுணுகிக் கற்கும்போது இத்தகைய அருஞ்சிறப்புடன் இருக்கும் வேறு பல மொழிகள் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இயல்பாகத் தோன்றும்.

உண்மையில் மனித மனங்களைக் கையாள்வதற்கு நம்மிடம் இருக்கும் உன்னதமான கருவி மொழி என்பதை உணர்ச்சிச் சாய்வுகளுக்கு ஆட்படாமல் உணர்ந்து கொண்டவர்கள் வெற்றுக்கூச்சலில் காலம் கடத்துவதில்லை. அதைக்கொண்டு பெரிய காரியங்களைச் செய்கிறார்கள். கூகுள் நல்ல எடுத்துக்காட்டு.

தனிப்பட, நேரமும் சூழலும் வாய்த்தால் நான் கற்க விரும்பும் மொழிகள்: சமற்கிருதம் பாலி, மலையாளம், சிங்களம், இந்தி. கடை மூன்றையும் அவற்றின் ஒலி இனிமைக்காகக் கற்க விரும்புகிறேன். முதலிரண்டிலும் அவற்றின் ஒலி இனிமை உபரி நன்மை. இந்தியச் சிந்தனை மரபை உள்வாங்குவதற்குப் பெரிதும் துணை புரியக்கூடியவை இம்மொழிகள் என்பது முதற் காரணம்.

ஏப்ரல் 18, 2022 முகநூலில் எழுதியது:

பசி மனிதனது பிரச்சனை; வாழிடம் மனிதனது பிரச்சனை; சுய மரியாதை மனிதனது பிரச்சனை. மொழி இவற்றையெல்லாம் எடுத்துச்சொல்வதற்குப் பயன்படுகின்ற வலிமையான கருவி. அதன் காரணமாகவே மனிதன் தனது சுயத்துடன் ஆழமாக அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒன்றாகிறது.

சென்ற நூற்றாண்டின் நாற்பதுகளில் இருந்து தமிழகத்தில் இடம்பெற்ற இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்களாகட்டும் சரி, பின்னர் இலங்கையில் ஆட்சியாளர்களால் ‘சிங்களம் மட்டும்’ சட்டம் கொண்டுவரப் பட்டபோது தமிழர் தரப்பு முன்னெடுத்த எதிர்ப்புகளாகட்டும் சரி – அவற்றுக்கான அரசியல் நியாயங்கள் வலுவாக இருந்தன. அதிகாரத்தில் இருந்தவர்கள் ஒரு மொழியை முடக்கி அதன் மூலம் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு இருந்தது.

இன்று உலகம் வெகுவாக மாறியிருக்கிறது. மேற்சொன்ன விதமான சூழ்ச்சிகளைத் தடுப்பதற்கும் தகர்ப்பதற்கும் ஏற்ற வகையில் தொழினுட்பம் தேவையான அளவு வளர்ச்சி கண்டிருக்கிறது. உலகின் எந்தவொரு மொழியை எவர் பேசினாலும் பேசும் அதே வேகத்தில், சமகாலத்தில், இன்னொரு மொழிக்கு அவ்வுரையை மொழிபெயர்க்கும் வல்லமை கொண்ட செயலிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பிரச்சனை என்னவென்றால் அவை இன்னமும் ஜனநாயக மயமாகவில்லை. எல்லோரும் பயன்படக் கூடிய வகையில் பரவலாக்கம் பெறவில்லை.

கூகுள், ஃபேஸ்புக், அமசோன் முதலான பெரு நிறுவனங்கள் இத்தகைய வசதிகளைத் தமது வணிக வளர்ச்சிக்காக நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. நான் இந்த வரிகளை இங்குத் தட்டச்சிக் கொண்டிருக்கும் இதே சமகாலத்தில் ஃபேஸ்புக்கின் செயற்கை நுண்ணறி கருவி இதைக் கிரகித்து எனது எண்ணவோட்டம் என்னவாக இருக்கிறது – எனக்கு என்ன விதமான விளம்பரங்களைக் காட்டலாம் என்றெல்லாம் கணித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பதிவை நான் குரல் வழி சொல்லச் சொல்ல கூகுள் புரிந்து கொண்டு தட்டச்சித் தருகிறது.

எனவே இன்றைய நிலையில் மக்களிடையேயான தொடர்பாடல் இடர்பாடுகளைக் களைவதற்காக ‘ஒரு மொழிக் கொள்கை’யைக் கொண்டு வரப்போகிறோம் என்று அதிகாரம் அறிவிக்கிறது என்றால் வேறு ஏதோ பிரச்சனையை மறைப்பதற்காக இந்தப் பாசாங்கைச் செய்கிறது என்று பொருள். ஏன் என்றால் தொடர்பாடல் இடைவெளியைக் குறைப்பதற்கு இன்றைய வசதிகளைப் பயன்படுத்தி உருப்படியான ஓர் அரசாங்கத்தால் எவ்வளவோ ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்ய முடியும். வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளில் இது சச்சரவின்றி நடந்துகொண்டும் இருக்கிறது.

மக்களின் பட்டினிப் பிரச்சனை சார்ந்த பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்காக அல்லது தமது சூறையை மறைப்பதற்காகக் கவனக் கலைப்பானாக இத்தகைய அறிவிப்புகளை அதிகாரத்தில் இருப்போர் வெளியிடும்போது அந்த அலையில் அள்ளுண்டுபோய் கொந்தளித்து எதிர்வினையாற்றுவது உண்மையில் நம்மை அறியாமலேயே அவர்களின் ‘அஜண்டாவுக்குள்’ போய் விழுகிற செயலாகவே அமையும்.

ஆளும் வர்க்கம் இந்தியாவில் போன்று “ஹிந்தியைத் தொடர்பு மொழியாக்க வேண்டும்” என்றோ இலங்கையில் போன்று “தேசிய கீதத்தைத் தமிழில் பாடக் கூடாது” என்றோ தந்திரம் செய்ய முனைந்தால், அதைக் கேட்டுக் கொந்தளிக்கும் தோழர்களுக்கு நான் சொல்லக்கூடிய பரிந்துரை: “உணர்ச்சிக் கொந்தொளிப்போடு அதற்கு எதிர்வினையாற்றி உங்கள் சக்தியை வீணடிக்காதீர்கள். இயலுமென்றால் இந்த யுகத்துக்கு ஏற்ற வகையில் உங்கள் மொழி ஏற்றம் அடைவதற்கும் மாற்றம் அடைவதற்கும் என்ன செய்ய முடியும் என்ற திசையில் உங்கள் சிந்தனையையும் செயல் வேகத்தையும் திருப்புங்கள். அடுத்த தலைமுறையிடத்தில் சிதைவுறாமல் நம் மொழியைக் கொண்டு செல்வது எப்படி என்பது பற்றிச் சிந்தியுங்கள்”.

Leave a Comment

Your email address will not be published.

×