நிரை அசை விகற்பங்கள்: விளாங்காய்ச்சீர் – விளங்கா(ய்)ச் சீர்

(இக்கட்டுரை எழுதத் தூண்டுகோலாக அமைந்த அறிஞர் முனைவர் நா கணேசன், மரபின் மைந்தன் திருவளர் முத்தையா ஆகிய பெரியோர்க்கு மிகு நன்றி. தொடர்புடைய செய்திகள் கட்டுரையின்கண் சொல்லப்பட்டுள்ளன)

கற்றலுக்குக் கற்பித்தலே மிகச்சிறந்த வழி என்றுணர்ந்த காரணத்தால் கடந்த மூன்றாண்டுகளாக இணையம் வழியாக யாப்பிலக்கணம் கற்பித்து வருகிறேன். வழக்குரைஞர், மருத்துவர், பல்துறைப் பேராசிரியர், கல்லூரி மாணவர் என்று பலதரப்பட்டோரும் இந்த வகுப்புகளில் பங்கேற்றுப் பயின்று வருகிறார்கள். (கற்போர் கருத்து இங்கே உளது)

உறுப்பியலில் குறில், நெடில், ஒற்று, அளபெடை, குறுக்கம், அவ்வவற்றுக்கான மாத்திரை அளவு என்று எழுத்தைப் பற்றிக் கற்பித்துவிட்டு, அசையை விளக்கியபோது ஒரு முறை ஒரு மாணவர் கேட்டார்:

எழுத்தின் மாத்திரை அளவு சொன்னீர்கள். சரி.

சிவா, வாசி என்ற இரண்டு சொற்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். இவையிரண்டும் ஒரே எழுத்துகளைக் கொண்டு, சம மாத்திரை அளவு காலம் ஒலிக்கும் சொற்கள். எழுத்தின் வரிசை மாறும்போது அசைப்பகுப்பில் வேறுபடுகின்றனவே, இதை எப்படி விளங்கிக் கொள்வது?

சிவா = குறில் (1) + நெடில் (2) = 3 மாத்திரை

வாசி = நெடில் (2) + குறில் (1) = 3 மாத்திரை

மாத்திரைக் கணக்கில் இரண்டும் ஒன்றுதான். ஆனால்,

சிவா = நிரை (ஓரசைச் சொல்)

வாசி = நேர், நேர் (ஈரசைச் சொல்)

எனக்கு இப்படி நுட்பமாகக் கேள்வி கேட்பவர்களை நிரம்பப் பிடிக்கும். தேடலைப் பெருக்கவும் சிந்தையை விரிக்கவும் கேள்விகளே உதவுகின்றன. எந்தவொரு மொழி நுட்பத்தையும் உருவகங்களாக விளக்கும்போது எல்லோரும் புரிந்துகொள்வார்கள் என்பதே எனது அனுபவம். நான் பின்வருமாறு விளக்கினேன்:

நீங்கள் அடிவாரத்தில் இருந்து மலை உச்சியை நோக்கி நடக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். பிறகு மலை உச்சியில் இருந்து கீழ் இறங்கி அடிவாரத்துக்கு வருகிறீர்கள். ஏறும்போது கடக்கும் தூரமும் இறங்கும்போது கடக்கும் தூரமும் ஒரே அளவானவை. ஆனால் இரண்டு பயணங்களும் ஒரே வகையானவையா? இல்லை, அல்லவா? மலையேற்றத்துக்கு இறக்கத்தை விட அதிக ஆற்றலும் நேரமும் தேவைப்படும். அதிகம் மூச்சிரைப்பீர்கள். இறங்கும்போது புவியீர்ப்பின் துணைகொண்டு சிரமம் அதிகமில்லாமல் இறங்கி விடுவீர்கள்.

சி -> வா = குறிலில் இருந்து நெடிலை நோக்கிய பயணம்; அடியிலிருந்து முடி நோக்கிய பயணம்

வா -> சி = நெடிலில் இருந்து குறிலை நோக்கிய பயணம்; முடியிலிருந்து அடி நோக்க்கிய பயணம்

ஒன்று ஏறுமுகம். இன்னொன்று இறங்குமுகம். வேறுவகைப் பயணம். அஃதாவது ஒலியின் அசைவு – அசை அளவு – வேறு.

யாப்பிலக்கணத்தில் உறுப்பியல் பாடங்களைப் பயின்றுவரும் முகிழ் நிலையில் நீங்கள் இருந்தால், எழுத்தும் அசையும் இயங்கும் முறையைப் புரிந்துகொள்ள இதுவரையான விளக்கம் போதுமானது. செய்யுளியல் பாடங்கள் வரை முன்னேறிவிட்டவர்கள் கூர்ந்துணர வேண்டிய இன்னொரு நுட்பம் இதில் உள்ளது.

‘சிவா’ என்பது அசைப்பகுப்பில் ‘நிரை’யசையாகவே இருந்தாலும், இது போன்ற குறில், நெடிலாக வரும் ஏறுமுகம் கொண்ட நிரை அசையைச் சமமுகம் கொண்ட நிரை அசையில் (குறில், குறில்) இருந்து பிரித்துணர்வது இன்றியமையாதது. வசி = சிவ எனவரும் நிரை அசையில் மேற்சொன்ன சிக்கல் இல்லை. பலவகையான பாக்களது ஓசையிலும் தாக்கம் செலுத்தக்க்கூடிய நுட்பமான பாகுபாடு இது. (வசதிக்காகக் குறில் நெடில் நிரை (சிவா), குறில் குறில் நிரை (சிவ=வசி) என்று குறித்திருக்கிறேன் ஆயினும் இவற்றைத் தொடர்ந்து ஒற்று வரும்போதும் இதுவே நிலை (முகம் vs முகாம்).)

குறில் குறில்( ஒற்று) என்ற வடிவில் வரும் நிரையசைக்கும், குறில் நெடில்( ஒற்று) என்ற வடிவில் வரும் நிரையசைக்கும் இடையில் உள்ள வேறுபாடு பல்வகைப் பாக்களின் ஓசையிலும் தாக்கம் செலுத்தும் என்று சொன்னேன். வெண்பாவில் கூவிளங்காய்/கருவிளங்காய்ச் சீரின் நடுவில் வரும் விள நிரை குறில் நெடிலாக வந்து சீர் ‘விளாங்காய்’ ஆகிவிட்டால் (எ+கா: தாறுமாறு) அது செப்பலோசைக்கு ஊறு என்பதைப் பாவல்லோர் பல்லோரும் பகுத்தாய்ந்து தக்க சான்றுகளோடு விளக்கியிருக்கிறார்கள்.

விளாங்காய்ச்சீரால் வெண்பாவின் செப்பலோசை கெடும் என முதலில் எழுதி விளக்கியவர் குமரகுருதாச பாம்பன் சாமிகள் (1848 – 1929) என்று தெரிகிறது (விளக்கம் கீழே காண்க).

நாசாவில் பணிபுரியும் தமிழ்வல்ல நல்லறிஞர் முனைவர் நா. கணேசனார் நடத்திவரும் ‘தமிழ்வட்டம்’ புலனக்குழுவில் கடந்த சில நாள்கள் இது தொடர்பில் ஓர் உரையாடல் நடந்து வருகிறது. அரிய பல செய்திகள் இதன்போது பகிரப்பட்டன. அவற்றைக் கட்டுரையின் முடிவிலே நன்றியுடன் பகிர்கிறேன். வெண்பாவைத் தாண்டி வேறுவகைப் பாக்களிலும் குறினெடில் நிரையைக் கையாளும்போது கவனம் தேவை என்பதை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

எழுத்தில் ஒருமுகப்படல்

ஒரு கட்டிடத்தை ஆக்குவன துண்டங்கள் (blocks), பிறகு அத்துண்டங்களுக்குள் இருக்கும் செங்கற்கள் என்றெல்லாம் விளக்க முடியும் என்றாலும் அடிப்படையில் அக்கட்டிடத்தை நிரப்பி நிற்பவை அணுத்துகள்களே என்பது போல, ஒரு செய்யுளின் அமைப்பை விளக்குவதற்கு அடி, சீர், அசை முதலான உறுப்புகள் பயன்பட்டாலும் அடிப்படையில் அப்பாட்டினுள் நிறைந்திருப்பது பல்வகை எழுத்தொலியே. அணுவைக் காணும் கூர்மை கட்புலனுக்கு இல்லை என்பதால் அதைவிடப் பெரிய அலகுகளை வகுத்துப் பகுத்துக் காண்கிறோம்.

சிதறாத மனங்கொண்டு கவிபாடுவோர்க்கு அடிகளிலும் அவற்றுளுறையும் சீர்களிலும் அவற்றுளுறையும் அசைகளிலும் கூர்த்துத் தெரிபவை எழுத்தொலிகளே. எழுத்தொலியில் மனம் ஒருமுகப்படுமென்றால் அசை பிறழாது; அதன் காரணமாகச் சீர் பிறழாது; அதன்வழி அடி பிறழாது; தளை பிறழாது; தொடை பிறழாது. எழுத்தே அடிப்படை.

சீரின் முதல் அசையாய் குறில் நெடில் நிரை – வண்ணப்பாட்டு

எழுத்தில் ஒருமுகப்படும் கலையில் அதியுச்ச சித்தி பெற்ற பெருஞானி அருணகிரிநாதர். சிவ நிரையும் (குறில், குறில்), சிவா நிரையும் (குறில், நெடில்) வெவ்வேறானவை என்பதை ஓதி உணர்வதற்கு மிக உதவுபவை வண்ணப்பாடல்கள் (சந்தப்பாடல்கள்).

எனவேதான் தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்.. என்றல்லாமல் வேறுவகைச் சந்தக் குறியீடுகளால் வண்ணப்பாட்டில் அசை பிரித்து அலகிடப்படுகிறது. (தனத்தன, தனாதன.. ). வல்லின ஒற்று வருமிடங்கள், வரா இடங்கள் முதலானவையும் சந்தப்பாட்டின் அலகிடலில் முதன்மை பெறும்.

சரி, சிவ – சிவா / குறில் குறில் (ஒற்று) – குறில் நெடில் (ஒற்று) பிரச்சனைக்கு வருவோம்.

பின்வரும் திருப்புகழ் அடிகளைப் படித்துப் பாருங்கள்:

இராவினிருள் போலும் பராவுகுழ லாலும்
     இராமசர மாகும் …… விழியாலும்

இராகமொழி யாலும் பொறாதமுலை யாலும்
     இராதஇடை யாலும் …… இளைஞோர்நெஞ்

சராவியிரு போதும் பராவிவிழ வேவந்
     தடாதவிலை கூறும் …… மடவாரன்

படாமலடி யேனுஞ் சுவாமியடி தேடும்
     அநாதிமொழி ஞானந் …… தருவாயே

மேற்கண்ட பாடலுக்கான சந்தம்:

தனாதனன தானம் தனாதனன தானம்
     தனாதனன தானம் …… தனதான

முருகுசெறி குழலவிழ முலைபுளக மெழநிலவு
     முறுவல்தர விரகமெழ …… அநுராகம்

முதிரவச மறவிதரி யெழுகைவளை கலகலென
     முகநிலவு குறுவெயர்வு …… துளிவீச

அருமதுர மொழிபதற இதழமுது பருகிமிக
     அகமகிழ இருகயல்கள் …… குழையேற

அமளிபடு மமளிமல ரணையின்மிசை துயிலுகினும்
     அலர்கமல மலரடியை …… மறவேனே

மேற்கண்ட பாடலுக்கான சந்தம்:

தனதனன தனதனன தனதனன தனதனன
     தனதனன தனதனன …… தனதான

இவ்விடங்களில் தனாதனன, தனதனன இரண்டையும் கருவிளங்காய் என்று மட்டும் கொண்டு – குறில் குறில் நிரை x குறில் நெடில் நிரை பேதத்தைக் கருத்தில் கொள்ளாமல் – பாட்டமைத்தால் இரண்டு பாடல்களிலும் சந்தம் சிதைந்து விடும் (சீரின் எவ்விடத்திலும் வல்லொற்று வாராது என்பது முதலான வேறுபல நுட்பங்களும் மேற்கண்ட பாடல்களில் உள்ளன. திருப்புகழ் படிக்க விரும்புவோர் இங்குச் செல்க)

குறில், நெடில், ஒற்று ஆகியவை வரும் இடங்களுக்கு ஏற்ப, தனியே ‘தேமா’ச்சீர் மட்டுமே தாத, தாதம், தாதா, தாதாம் என்று தொடங்கி 12 வகைச் சந்தக் குறியீடுகளாக விரியுமெனக் காட்டுவார் பாவலரேறு ச. பாலசுந்தரம் (பார்க்க: தென்னூல்).

எனில், தேமா முதற்கொண்டு கருவிளங்கனி வரையான பன்னிரு சீர்களையும் பன்னூற்றுக் கணக்கான சந்தக் குறியீடுகளாக விரிக்கலாம். நறுநிழல் வரை சென்றால் இன்னும் மிகும்.

(மேலும் பல உறுப்பியல்சார் நுட்பங்கள் அறிய வேண்டுவோர் காண்க: பேராசிரியர் ய. மணிகண்டனின் ‘தமிழில் யாப்பிலக்கணம் – வரலாறும் வளர்ச்சியும்’, காலச்சுவடு வெளியீடு; முனைவர் சோ. ந. கந்தசாமியின் ‘தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும், முதல் பாகம் – முதற்பகுதி’, தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர்).

சரி, வண்ணப்பாட்டு எழுத்தால் அலகு பெறுவது அறிந்த செய்தி தானே, குறில் நெடில் நிரைவரும்போது கவனம் கொள்ள வேண்டிய வேறு வகைப் பாடல் உண்டா? என்றால் உண்டு என்பதே பதில்.

வெண்பாவில் ‘வீடுபேற்றை’, ‘கேட்கமாட்டேன்’ என்பன போன்ற விளாங்காய்ச் சீர் வரலாமா? என்ற கேள்விக்கு வெண்பாவில் என்ன? எவ்வகைப் பாவிலும் விளாங்காய்ச் சீர் வருவது விரும்பத் தக்கதன்று. அது எந்தப் பாவில் அமைந்தாலும் அப்பாவுக்குரிய ஓசையைக் கெடுத்துவிடும் என்று விடையிறுத்துகிறார் ’இலக்கணச் சுடர்’ இரா. திருமுருகன்.

வண்ணப்பாட்டைப் பொறுத்தமட்டில் முதல், கடை, இடை என எவ்விடத்து வரும் அசையானாலும் இதுவே நிலை. சீரின் இடையிலும் கடையிலும் கவனம் கொள்ள வேண்டிய சில பாவகைகளை இனிப்பார்ப்போம்.

கட்டளைக் கலித்துறை

நெடிலடி நான்கு வந்து, அடிதோறும் இருக்கும் ஐஞ்சீரிடையேயும் வெண்டளை பிறழா வண்ணம், ஒவ்வோர் அடியினதும் ஈற்றுச்சீர் கூவிளங்காய் அல்லது கருவிளங்காய் எனவமைய ஏனைய முதல் நான்கு சீர்களிலும் விளங்காய்ச்சீர் வாரா வண்ணம் பாடப்பெறுவது கட்டளைக் கலித்துறை. முதல் நான்கு சீர்களிலும் ஈரசைச் சீர்களே பெரும்பான்மை பெறும். தேமாங்காய், புளிமாங்காய் சிறுபான்மை வரலாம். அரிதாகக் கடைச்சீர் தேமாங்கனி, புளிமாங்கனி என அமையலாம். இது தவிர வேறு எவ்விடத்திலும் கனிச்சீர் வரலாகாது. இவ்விலக்கணத்துக்கு அமையப் பாடிவிட்டால் நேரசையில் தொடங்கும் பாடலின் ஒவ்வோர் அடியையும் ஒற்று நீக்கி எழுத்தெண்ணிப் பார்க்க 16 எழுத்துகள் இருப்பதையும் நிரையசைத் தொடக்கம் கொண்ட பாடலின் அடி ஒவ்வொன்றிலும் ஒற்று நீக்கி எழுத்தெண்ணிப் பார்க்க 17 எழுத்துகள் இருப்பதையும் காணலாம். அடிதோறும் முதற்சீரும் கடைச்சீரும் மோனை பெறுதல் வேண்டும். பாட்டின் ஈற்றசை ஏகாரமாக முடியும்.

மேலே சொல்லப்பட்டவை தவிர, எழுதப்படாத – கவியின் கூர்மதியால் உணரப்பட வேண்டிய – இன்னொரு விதி இப்பாடலுக்கு உண்டு. கட்டளைக் கலித்துறையில் கூவிளம், கருவிளம் ஆகிய ஈரசைச்சீர்களின் ‘விளம்’ என்ற ஈற்றசை ‘விளாம்’ என்றவாறு குறினெடிலாக அமையலாகாது என்பதே அது. அதாவது ‘திருவிழா’, ‘பேசடா’ என்பன போல விளச்சீர் அமையக்கூடாது.

பெருங்கவிகள் பலரும் இதற்கமைவாகவே பாடியிருப்பதைப் பின்வரும் நூல்களைப் படித்தறிக:

கம்பரின் சரசுவதி அந்தாதி

ட்டரின் அபிராமி அந்தாதி

பட்டினத்தாரின் திருவேகம்பமுடையார் திருவந்தாதி முதலானவை

இக்கட்டுரையின் ஆசிரியர் மதுரன் தமிழவேள் எழுதிய தமிழ்த்தாய் அந்தாதியை இங்கே படிக்கலாம். கட்டளைக் கலித்துறை வடமொழியில் இருந்து வந்த செய்யுள் வடிவம் என்பர். ‘ஐகிரி நந்தினி‘ என்ற சமற்கிருதத் தோத்திரப்பாடல் இச்சந்த அமைப்பில் இருப்பதைக் காணலாம்.

விருத்தம்

காய்ச்சீர் முதன்மை பெற்றுவரும் கழிநெடிலடி விருத்தங்களில் விளாங்காய்ச்சீர் (விள நிரை குறில் நெடிலாய் வரல்) வாராமல் பார்த்துக் கொள்வது பாட்டின் ஓசையைக் காக்கும். விளாம் என்று வந்துவிட்டால் நேரசைச்சீர் சேர்த்துக் காயாக்கித் தொடராமல் ஈரசைச் சீராக முடித்துக்கொள்வதே வழமை. வகையுளியாக* வரினும் இழுக்கன்று. பாரதியிடத்தில் பல காட்டுகள் பார்க்கலாம்:

காய், காய், காய், காய், மா, தேமா என்ற அமைப்பில் வரும் அறுசீர்விருத்தம்:

உ.வே.சாவுக்கு வாழ்த்து

செம்பரிதி ஒளிபெற்றான் பைந்நறவு
சுவைபெற்றுத் திகழ்ந்த தாங்கண்
உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்
றெவரேகொல் உவத்தல் செய்வார்?
கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநா
தப்புலவன் குறைவில் கீர்த்தி
பம்பலுறப் பெற்றனனேல், இதற்கென்கொல்
பேருவகை படைக்கின் றீரே?

அன்னியர்கள் தமிழ்ச்செவ்வி அறியாதார்
இன்றெம்மை ஆள்வோ ரேனும்
பன்னியசீர் மகாமகோ பாத்தியா
யப்பதவி பரிவின் ஈந்து
பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநா
தன்றனக்குப் புகழ்செய் வாரேல்
முன்னிவனப் பாண்டியர்நாள் இருந்திருப்பின்
இவன்பெருமை மொழிய லாமோ?

அன்னை நிவேதிதை

அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்
கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா
டாம்பயிர்க்கு மழையாய் இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
பெரும்பொருளாய்ப் புன்பைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கியதாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்

காய், காய், மா, தேமா / காய், காய், மா, தேமா என்ற அமைப்பில் வரும் எண்சீர் விருத்தம்:

பாரதி அறுபத்தாறு:

பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்

பொந்திலே யுள்ளாராம், வனத்தில் எங்கோ
புதர்களிலே யிருப்பாராம்,பொதிகை மீதே
சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே
சற்றேயங் கங்கேதென் படுகின் றாராம்

இவை காய் வரும் இடங்களில் விளாம் வந்துள்ள இடங்கள். இன்னும் பல பாடல்கள் இவ்வாறு உள. பல சித்தர் பாடல்களிலும் பார்க்கலாம்.

*வகையுளி: சொல்லின் முடிவைச் சீரின் முடிவாக அமைக்காமல், ஓசை கெட வாய்ப்புள்ள இடங்களில் சொல்லை அசைப்படி அறுத்து இரண்டு சீர்களில் வைக்கும் வழக்கம்:

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் (குறள் 26)

செய்கலாதார் என்பதைச் சொல்லின் முடிவு நோக்கி ஒரே சீருள் வைத்தால் விளாங்காயாக வந்து ஓசை கெடும். எனவே வகையுளியாக்கிச் ‘செய்கலா தார்’ என்று இரண்டு சீர்களாக வைத்தார்.

வெண்பா

செய்யுளின் ஈற்றுச்சீர் நேர், நிரை, நேர்பு, நிரைபு (நாள், மலர், காசு, பிறப்பு) ஆகியவற்றில் யாதாயினுமோர் ஓரசைச்சீராக* இருக்க, ஈற்றடி சிந்தடியாக அமைய ஏனைய அடிகள் அளவடியாக வந்து, முதற்சீர் தொடக்கம் கடைச்சீர் வரை வெண்டளை பிறழா வண்ணம் பாடப் பெறுவது வெண்பா.

*(குற்றியலுகரத்தின் மாத்திரைப் பெறுமானம் கருதி நேர்பு, நிரைபு முதலானவையும் ஓரசைச்சீர்களாகக் கணிக்கப்பெறுவதே தொல்காப்பிய மரபு)

ஈரடி கொண்ட குறள்வெண்பாவில் தொடங்கி ஆயிரம் அடிகள் வரை நீளும் கலிவெண்பா வரை மேற்சொன்ன பொதுவிலக்கணத்தின்படி பாடப்பெறும். எனினும் வெண்பாவில் விளாங்காய்ச்சீர் (விளா = குறில், நெடில் நிரை) வரலாகாது. ஏலவே சொன்னதைப் போல இது வேறு இடங்களில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. மீளவும் இங்கு விரித்துரைக்காமல் பாம்பன் சாமிகள் கூறிய விளக்கத்தை இங்கே தருகிறேன்:

பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் “ திருவலங்கற்றிரட்டில்” இருந்து :

“ வெண்பாவுக்குரிய காய்ச்சீர் நான்கனுள் இடையில் குறில்நெடில் இணைந்த நிரையசை உடையனவும், இரண்டு மாஞ்சீராகப் பிரிக்கத் தகுவனுமான ‘தம்பிரானே’ என்பது போன்ற கூவிளங்காயும் , ‘சருவசாரம்’ என்பது போன்ற கருவிளங்காயும் வெண்பாவில் வரவொண்ணா எனவும், வரின் ஓசைநயங் கெடும் எனவும் அறிக. கலிப்பாவில் வரும் காய்ச்சீர்கட்கும் இந்நியாயங் கொள்க.”

முனைவர் நா. கணேசன் அவர்களது வலைத்தள இணைப்புகள்:

விளங்காயும் விளாங்காயும் – பேரா. இராம. சுப்பிரமணியன் (வெண்பா இயற்றும் மரபு)

வெண்பாவில் விளாங்காய்ச் சீர் – புலவரேறு சீனிவாசன் அவர்களின் திருக்குறள் முன்னுரையிலிருந்து

இவ்விதிக்கு ஒரேயொரு விதிவிலக்கு ‘நமசிவாய’ என்னும் திருவைந்தெழுத்து மந்திரம் என்பர். கலிவெண்பாவில் அமைந்த மாணிக்கவாசகரின் சிவபுராணம் இச்சொல் கொண்டே தொடங்குகிறது.

ஏன் விளாம் வேண்டாம்?

சரி, விளாம் சீர் தொடர்பில் ஏன் இத்தனை ஒவ்வாமை? அது அப்படியென்ன தீங்கைச் செய்துவிடப் போகிறது? மேலே சிவா-வாசி தொடர்பில் சொல்லப்பட்ட மலையேற்ற விளக்கத்துடன் தொடர்புடையதுதான் இதற்கான பதிலும்.

வெண்பா, கட்ட்டளைக் கலித்துறை, மேலே சொல்லப்பட வகை விருத்தங்கள் ஆகியவற்றில் சீரின் இடையே குறிலை அடுத்து நெடில் வந்துவிடும்போது, அந்தப்பா ஏற்றுக்கொண்ட ஓசையின் பயணத்தில் சமதரையின் இடையே தடையாக எழுந்து நிற்கும் கற்குன்றம்போல அது குறுக்கிடுகிறது. வெண்பாவிலும் விருத்தத்திலும் காய்வரை நீளும் வசதி இருப்பதால் ஓரசையைக் குறைப்பதன் மூலம் அது சமன் செய்யப்படுகிறது. கட்டளைக் கலித்துறையின் முதல் நான்கு சீர்களும் ஈரசைகளுக்கானவை என்பதால் அவ்வகை நிரை வர இடமிருப்பதில்லை.

அளபெடுத்து இறும் நிரை அமைந்த சீரை விளாங்காயாகக் கொள்ளலாமா?

வெண்பாவில் விளாங்காய்ச்சீர் வரும் என்பதற்கான காட்டாக அளபெடுத்து முடியும் காய்ச்சீர்களைச் சிலர் சொல்வதுண்டு. இன்னிசை அளபெடை வரும் பின்வரும் குறள்வெண்பாவை எடுத்துக்கொள்ளுங்கள்:

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை (குறள் 15)

கெடுப்பதூஉம் என்பதை

கெடுப் (நிரை: குறில், குறில், ஒற்று) | பதூ (நிரை: குறில், நெடில்) | உம் (நேர்: குறில் ஒற்று)

என்றவாறு அலகிட்டு ‘விளாங்காய்’ ஆகக் கொள்ளுவோர் உளர். பாட்டின் ஓசை சிதையும் என்றால் அளபெடை அலகு பெறாது என்பது பொதுவிதி. விதிக்கான நியாயத்தைப் புரிந்து கொள்ள எழுத்தொலிகளின் அசைவை – அவை அசையாகும் வகையைக் – கவனித்தாக வேண்டும்.

ஒரு நெடில் எழுத்து தானே அளெபெடுத்து இன்னும் ஒரு மாத்திரை அளவுகாலம் ஒலிப்பதற்கும் தன்னிலிருந்து வேறான – ஒரு மாத்திரை அளவுள்ள – குறிலை எதிர்கொள்வதற்கும் இடையில் வேறுபாடு உண்டு.

தொழாஅர் – ழா வில் இருக்கும் ஆகார நெடில் ஒலி அளபெடுப்பதைக் குறிக்க நாம் வரிவடிவில் நெடிலை அடுத்து அகரக் குறிலைச் சேர்த்தாலும் உண்மையில் அவை இரண்டு எழுத்துகள் அல்லவே; ‘ஆ’ இன்னும் ஒரு மாத்திரை அளவு காலம் நீண்டொலிக்கிறது. அவ்வெழுத்தின் மூன்று மாத்திரை அளவு கால ஒலிப்புக்கு இடையில் விட்டிசைப்பு – நிறுத்தம் – இல்லை.

தொழாமல் – (ழ்+)ஆ நெடில் இரண்டு மாத்திரை அளவு காலம் ஒலித்து முடிய ‘ம்’ மெய்யை எதிர்கொள்கிறது. மிக நுண்ணியதான ஒரு நிறுத்தம் அங்கே நிகழ்ந்து பிறகு ‘ம்’ அகரத்தோடு கலக்கிறது.

தொழாஅர், தொழாமல் – இரண்டும் மாத்திரைக் கணக்கில் ஒரே அளவு என்றாலும் ஒலிப்பில் மாறுபடுபவை.

இவ்வகையில் ‘கெடுப்பதூஉம்’ என்பதைக் ‘கெடுத்திடாத’ என்பது போன்ற விளாங்காய்ச் சீராகக் கொள்ள இயலாது.

சில குறிப்புகள்:

  1. இடையில் குறில் நெடில் நிரை வரும் விளங்காய்ச்சீரை ‘விளாங்காய்ச்சீர்’ என்று குறிப்பது தேவையா? மரபில் இருந்து மாறலாமா என்றவொரு கேள்வி உள்ளது. மேலே காணப்படும் பாம்பன் சாமிகளின் விளக்க மேற்கோளில் விளாங்காய்ச்சீர் என்ற பதம் இடம்பெறவில்லை. எனவே இது பின்வந்த வழக்கு. புதிதாக யாப்பிலக்கணம் பயில வரும் ஒருவருக்கு இது குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்பது உண்மையே. எனினும் துறைசார் கற்றலிலும் உரையாடலிலும் இவ்வகைப் புதுப்பயன்பாடு எழுவது இயல்பான ஒன்றே. ஏற்றது நிலைக்கும், இல்லாதது ஒழியும் எனக்கொள்ளலாம். வண்ணப்பாடல்களுக்குத் தனிவகைச் சந்தக் குறியீடு உண்டென்பதை மேலே பார்த்தோம். தற்போது நாம் பயன்படுத்தும் தேமா, புளிமா, கூவிளம், கருவிளம், காய், கனி போன்றவை கூடப் பல்வகைப் பயன்பாடுகளுக்குப் பிறகு ஒரு புள்ளியில் நிலைபெறத் தொடங்கியவையே. தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் ஆகிய சீர்களை இளம்பூரணர் முறையே மாவாழ்கான், புலிவாழ்கான், மாவருகான், புலிவருகான் என்று குறித்ததையும் மாசெல்வாய், புலிசெல்வாய், மாவருவாய், புலிவருவாய் ஆகிய சொற்களால் பேராசிரியர் சுட்டியதையும் முனைவர் சோ ந கந்தசாமி தனது ‘தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் – முதல் பாகம் – முதற்பகுதி’ நூலில் குறிக்கிறார் (பக் 136).
  2. பிற்சேர்க்கையாக முனைவர் நா. கணேசன் அவர்களது குறிப்பு: (விளாங்காய்ச் சீரை) பாம்பன்சாமி சொற்களால் விளக்கினார். அதற்கு, விளாஞ்சீர் எனப் பெயர் கொடுத்தார் கிவாஜ. இது மயக்கம் தரும். கூவிளம், கருவிளம் என்பவற்றொடும் மயங்கும் தன்மைத்தாகையினாலே, விளாங்காய்ச் சீர் எனப் பெயரமைத்தார் பேரா. ராமசுப்பிரமணியன்.

2 thoughts on “நிரை அசை விகற்பங்கள்: விளாங்காய்ச்சீர் – விளங்கா(ய்)ச் சீர்”

  1. சிவா, வாசி — வேறுபாடு குறித்துத் தங்கள் விளக்கம் அற்புதம்.
    தங்கள் தமிழறிவும்,கற்பிக்கும் ஆற்றலும் கண்டு வியந்து போற்றுகின்றேன்
    நண்பர் மதுரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
    —தில்லைவேந்தன்.

  2. பவானி .சா

    “நுட்பமாகக் கேள்வி கேட்பவர்களை நிரம்பப் பிடிக்கும். தேடலைப் பெருக்கவும் சிந்தையை விரிக்கவும் கேள்விகளே உதவுகின்றன. எந்தவொரு மொழி நுட்பத்தையும் உருவகங்களாக விளக்கும்போது எல்லோரும் புரிந்துகொள்வார்கள் என்பதே எனது அனுபவம்.”
    உண்மை! அருமை! சிறப்பு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×