வெண்பா, க.கலித்துறை: பள்ளிக் காலத்தில் எழுதிய பாக்கள்

எனது கவிதைகளைத் தொகுத்து நூலுருவிற் கொண்டுவரும் முயற்சியை முதன் முதலாக 2003ம் ஆண்டு தொடங்கினேன். அப்போது எனக்கு அகவை 20. திண்டுக்கல்லைச் சேர்ந்த பதிப்பகத்தார் ஒருவர் நூலை வெளிக்கொணர முன் வந்தார். எனது தந்தையாரும் உந்துதலாக இருந்தார். 16ம் அகவையில் இருந்து 20ம் அகவை வரை எழுதிய கவிதைகளைத் தொகுத்துத் தந்தேன். இப்போதுபோல அசுரத்தனமாக நூல்களை அச்சிட்டு வெளித்தள்ளும் வசதியும் வழக்கமும் அக்காலத்தில் இருக்கவில்லை. கவிதைகளைக் கையளித்து ஈராண்டின் பின்னர்த் தமிழகத்தில் இருந்து மெய்ப்புப் பார்ப்பதற்கான முதற்படி என்னிடம் வந்து சேர்ந்தது.

இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் கவிதை பற்றிய எனது பார்வை முற்றுமாக மாறியிருந்தது. யாப்பை மீறிப் புதுக்கவிதை எழுதும் ஆவல் கூடியிருந்தது. இறை மறுப்பு, மார்க்சியம் என்பதான திசையில் சிந்தனை வளர்ந்திருந்தது. எனவே அத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகளை முற்றுமாகப் புறக்கணித்து விட்டேன். அந்நூல் வெளிவரவேயில்லை.

2003 – 2005 திசம்பர் வரையான கவிதைகளைத் தொகுத்து 2006 ஜனவரியில் ‘ஒளியின் மழலைகள்’ என்ற தலைப்பிலான நூலாகக் கொண்டு வந்தேன்.

வெளிவராத கவிதைத் தொகுப்பின் மெய்ப்புப் படியை இன்று எடுத்துப் படித்துப்பார்த்தேன். மிகை நம்பிக்கையின் ஒளிமுகம் கொண்ட ஓர் இளங்கவி தெரிந்தான். வேண்டாம் என்று ஒதுக்கும்படியாக மோசமாக அமைந்தவை அல்ல அக்கவிதைகள்.

“விந்தையன்றோ பிஞ்சிளமைக் காலத்தோர் பாவரசன் போலநீ செஞ்சொற்பா செய்யுகின்ற சீர்” என்று காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் நூலுக்களித்த ஆசிப்பாவில் எழுதியிருக்கிறார்.

கீழே உள்ளவை 2001ம் ஆண்டில் எழுதியவை. அகவை 17. அப்போது எனக்கு எல்லாமே பாரதி தான். கவிதையில் கையாண்டுள்ள மொழியில் அது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது (பதிவிற்காகச் சேர்த்திருக்கும் படம் 11 வயதில் எடுத்தது):

(வெண்பா)

மூவுல குக்கும் முதலான மோனநிலைத்
தேவனுனைச் சித்தந் தெளிந்தேத்தும் – பாவலனாய்
யானென்றும் வாழவருள் ஈர்ப்பைப் பெருவயிற்று
ஞான கணபதியே நல்கு.

(கட்டளைக் கலித்துறை)

நல்குவை தேவே! நமனெதிர் நின்று நகைத்திடினும்
சொல்லுறு நெஞ்சச் சுடர்விளக் கேற்றித் தொழுதுனது
வல்லமை போற்றும் வலிமையி னாலே மரணபயம்
கொல்லுவன் என்ற குணமும் உறுதியும் கோப்புடனே!

(விருத்தம்)

காண்பனவும் களிப்பனவும் கவிந மக்கே!
கருத்திலுறுஞ் செய்கையெலாம் கவிந மக்கே!
வீண்படுமோ ‘உள்ள’நிலம் ஆளும் வீரை
வீறுடனே எனக்களித்த வித்தை எல்லாம்?
தூண்பிளந்த நரசிங்கர் கோபத் தீயும்
தோன்றிவந்தென் கவிதையிலே துலங்கக் காண்பீர்!
மாண்புறுமா றிவ்வையம் மாற்றி வைப்பேன்
மாகாளி எனக்கருள்வாள் திண்ணம்! திண்ணம்!

(வெண்பா)

மூண்டெழுந்த பாரதி, முன்னம்நற் கம்பனென
யாண்டும் நிகரிலரை ஈதலால் – ஈண்டுயர்ச்சி
தேர்வாளாய் ஓங்குஞ் செழுந்தமிழே! என்கவிதைப்
போர்வாளுள் எய்திப் பொலி.

என்னாவில் வாணி இருப்பதுமெய் யாகுங்கால்,
முன்னாளில் எங்கள் முதுதமிழைத் – தன்னாவி
போற்கருதி வாழ்ந்த புலவன் மொழியொத்தென்
வேற்கவிதை கொள்ளட்டும் வீறு.

முன்னென்றுங் காணா முறைமையிலே தன்பிள்ளை
கன்னற்றேன் ஒப்புங் கவிதைபல – மன்னித்
திமிர்ந்தொளிரும் ஞானச் செருக்குடனே பாடத்
தமிழெனக்காய்ச் செய்தாள் தவம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×