வெற்றிக்கழகம்: ஒற்றுப்பிழை தவிர்த்தல்

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவரது கட்சிப்பெயர், அத்தொடர்பில் வெளியாகியிருக்கும் அறிக்கை ஆகியன குறித்து அண்மையில் முகநூலில் எழுதிய மூன்று பதிவுகள்:

முதலாம் பதிவு:

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ‘ என்ற வள்ளுவ நெறியை வழிகாட்டும் தொடராக விஜய் அறிவித்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.

அதே நேரம், எழுத்துத் தமிழின் அடிப்படை தெரிந்த ஒருவரை ஊடகப் பரப்புரைக்கு அவர் வைத்துக்கொள்வது நலம்.

கட்சியின் பெயரில் தொடங்கி (வெற்றி’க்’ கழகம்), அறிக்கை எங்கணும் வரவேண்டிய இடங்களில் வல்லின ஒற்று விடுபட்டுள்ளது. வேறு பிசகுகளும் உள.

வல்லினம் தமிழுக்கு வலிமை.

அரசியலில் மொழியைப் போலப் பயன் தரக்கூடிய கூராயுதம் வேறொன்றில்லை.

கோடிப் பேரைச் சென்றடையக் கூடியவை விஜயின் சொற்கள்.

தமிழர்க்கு நன்மை செய்வதைத் தமிழுக்கு நன்மை செய்வதில் இருந்து அவர் தொடங்கலாம்.

இலக்கண விளக்கம்:

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வல்லினம் மிகும். வெற்றியை உடைய கழகம் / வெற்றியை அவாவும் கழகம்: வெற்றிக் கழகம்.

நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை எனவும் கொள்ளலாம். இங்கும் வல்லினம் பெரும்பாலும் மிகும்.

வெற்றிக்கு உரிய கழகம் = வெற்றிக்கழகம்

பிற்சேர்க்கை:

விஜய் கட்சிப் பெயரில் ஒற்றெழுத்து விடுபட்டுள்ளதைச் சுட்டி எழுதியதும், ஓரெழுத்து – அதுவும் மெய்யெழுத்து – விடுபட்டால் பெரிதாக என்ன குறை வந்துவிடப் போகிறது என்று ஒருவர் கேட்கிறார்.

தமிழ் ஒலி நுட்பம் மிகுந்த மொழி. பல இடங்களில் ஓரெழுத்து பொருளையே மாற்றிவிடும்.

எ+கா:

யானைத்தந்தச்சிற்பம் – யானையின் தந்தத்தால் ஆன சிற்பம்.

யானை தந்த சிற்பம் – யானை கொடுத்த சிற்பம்

இரண்டாம் பதிவு

#தமிழ்#இலக்கணம்

விஜயது கழகம் = வெற்றி’க்’ கழகம் – ஒற்று மிகாதா?

மிகும் என்றே முன்னைய பதிவில் எழுதியிருந்தேன்.

மிகாத இடங்களும் உள்ளன என்பதைச் சுட்டவே இந்தப் பதிவு. விஜய் கட்சிக்கு இது பொருந்துமா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள முழுவதுமாகப் படியுங்கள். கொஞ்சம் தமிழ் இலக்கணமும் அறிந்து கொள்வீர்கள் 🙂

-x–x–x–x–x

விஜய் உடைய கட்சி அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ‘வெற்றிக்கழகம்’ என்ற தொடரில் ‘க்’ ஒற்று விடுபட்டுள்ளதைப் பலரும் சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறார்கள்.

ஒற்று மிகாது (‘க்’ வராது) என்று வீம்புக்கு வாதிடுவோரிடத்தில் ஏன் மிகாது என்ற இலக்கணத் தெளிவு இல்லை.

ஒரு சொற்றொடரில் வெற்றி, கழகம் ஆகிய சொற்கள் (க்) வல்லின ஒற்று மிகாமல் அடுத்தடுத்து வரக்கூடிய இடங்கள் உள்ளனவா?

இரண்டு சந்தர்ப்பங்கள் உள.

1) வெற்றி, கழகம் ஆகியன உம்மைத்தொகையாக வருமிடத்து ஒற்று மிகாது. அதாவது, வெற்றியும் கழகமும் என்பதை ‘உம்’ உருபு மறைத்து வெற்றி கழகம் எனல்.

‘தேக்கு கருங்காலி முதிரை’ என்று வரிசைப்படும் தொடருக்கு ‘தேக்கும் கருங்காலியும் முதிரையும்’ என்றே பொருள்.

விஜய் கட்சிப் பெயரில் உம்மைத்தொகையாக வரவில்லை. எனவே இந்த விளக்கம் பொருந்தாது.

2) வெற்றி என்பது ஒரு மனிதருடைய பெயராக இருந்தால், அவரது கழகம் என்ற பொருளில் கொள்ளும்போது அங்கே ஒற்று மிகாது.

‘கருணாநிதி கட்சி’ என்றால் கருணாநிதியது கட்சி என்றே பொருள். அங்கே ‘கருணாநிதிக்கட்சி’ என்று ஒற்று மிகுவித்து எழுதக்கூடாது. எழுதினால் நிதிக்கான கட்சி என்று பொருள் மாறிவிடும்.

இலக்கண விளக்கம்:

ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாக இருப்பின் அதன்முன் வரும் வல்லினம் மிகாது.

காளி + கோவில் = காளிகோவில் ✅ (‘காளிக்கோவில்’ அன்று ❌)

கண்ணகி + சிலம்பு = கண்ணகி சிலம்பு ✅(‘கண்ணகிச்சிலம்பு’ அன்று❌)

காளி, கண்ணகி – உயர்திணை.

எனவே ‘வெற்றி கழகம்’ என்ற தொடர் ‘வெற்றி’ என்ற ஒரு மனிதரது கழகத்தைக் குறிக்கிறது என்று கொண்டால் அங்கே ஒற்று மிகாது. ‘க்’ வராது.

‘விஜய்’ என்ற சமற்கிருதச் சொல்லுக்கு (பெரு)வெற்றி என்று தானே பொருள்!

ஆனால் கட்சிப் பெயர் வைத்து அறிக்கை வெளியிட்டவர்களுக்கு இந்த இலக்கணத் தெளிவு இருக்கவில்லை என்பதை அறிக்கையில் இருக்கும் ஏனைய பிழைகள் காட்டுகின்றன.

மாணவர்களை இலக்கு வைத்து அரசியலில் இறங்கும் ஒருவர் தமிழ்க்கல்வியைக் காப்பது இன்றியமையாதது.

மூன்றாம் பதிவு

ஒற்றுப்பிழை பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தபோது இது நினைவுக்கு வந்தது.

[ஒற்றெழுத்து = க், ங், ச், ஞ், ட்… முதலான மெய்யெழுத்து / புள்ளியெழுத்து]

படத்தில் உள்ளதைப்போன்ற கதவுத் தடுப்பான்களைப் (Door wedge) பார்த்திருப்பீர்கள்.

ஒருமுறை இப்படித்தான்… அறைக்குள் நுழையும்போது முன்னே சென்றவர் பாராமுகமாக இப்படியான ஒரு கதவுத்தடுப்பானை எற்றி விலக்கிவிட்டுச் சென்றார். தடுப்பான் அற்ற கதவு அடுத்து வந்தவர் முகத்தில் மோதப்பார்த்தது.

தேவையானபோது கதவைத் திறந்த நிலையில் வைத்திருந்து உள்ளே வர வேண்டியவர்களை வர வழிசெய்வது தடுப்பானின் வேலை. வேண்டாதவர்கள் உள்ளே வராதபடி செய்ய வேண்டும் என்றால் தடுப்பானை நீக்கி விட்டுக் கதவை மூடி வைக்க வேண்டும்.

பல அடி உயரம் கொண்ட கதவின் கீழிருந்து கொண்டு, விரல் அளவேயான சின்னஞ்சிறிய தடுப்பான் இந்தப் பென்னம்பெரிய வேலையைச் செய்கிறது.

மொழியில் ஒற்றெழுத்தின் வேலை இத்தகையதுதான். பன்மாத்திரையளவு காலம் ஒலிக்கும் இரு சொற்கள் ஒன்றையொன்று சந்திக்கும்போது, அங்கே ஒரு நிறுத்தம் (pause) அல்லது அழுத்தம் (pressure) தேவையா இல்லையா என்பதை அரை மாத்திரையளவே ஆன ஒற்றெழுத்து தீர்மானிக்கிறது.

இட வேண்டிய இடத்தில் ஒற்றெழுத்தை இடாது போனால் தடுப்பான் அற்ற கதவு முகத்தில் மோதி அறைவதுபோல, வருமொழியுடன் நிலைமொழி இடறி மோதி அவற்றின் பொருளைச் சிதைத்துவிடும். தேவையற்ற இடத்தில் இட்டாலும் இதுவே நிலை.

‘அவரையைத் தின்றான்’ என்பதை ‘ஐ’ உருபு நீக்கி வேற்றுமைத்தொகையாக ‘அவரை தின்றான்’ என்றுஞ் சொல்லலாம்.

ஆனால் அங்கே தேவையில்லாமல் ஒற்றெழுத்தென்ற தடுப்பானை வைத்தீர்கள் என்றால், பொருள் மாறி ஒரு மனிதரைத் தின்றான் (‘அவரைத் தின்றான்) என்றாகி விடும்!

ஒற்றுப்பிழை சுட்டிச்சொலல் இற்றைப்பொழுதுடன் முற்றுப்பெற்றது 🙂

-x–x–x–x–x

(i) வல்லினம் மிகும் இடங்கள் அறிய: இங்கே செல்க

(ii)வல்லினம் மிகா இடங்கள் அறிய: இங்கே செல்க

(iii)கற்றுணரத் தக்க, அருமையான படைப்பு –
கி. செம்பியன், க் ச் த் ப் மிகுதலும் மிகாமையும்: இங்கே செல்க

(iv)தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய வழிகள், முனைவர் மணிமேகலை புஷ்பராஜ், ஒன்பதாம் பதிப்பு, 2014: இங்கே செல்க

(v) உசாத்துணை
அ.வி.ம (நாவலர் மாநாடு விழா மலர், 1969. நல்லூர், யாழ்ப்பாணம். பக். 57-60
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, கொழும்பு.): இங்கே செல்க

2 thoughts on “வெற்றிக்கழகம்: ஒற்றுப்பிழை தவிர்த்தல்”

 1. அ.இருளப்பன்

  திரைஉலகில் ஒற்றுஇன்றி படங்களின் பெயர்கள் வைத்தகாலத்தில் விவாதங்கள்நடந்தன.
  அதற்கு திரைஉலக எழுத்தாளர்கள் *ஒற்றுபோட்டால் ராசிஇல்லை*
  என்றனர்.
  வெற்றிப்படிகள் என்று எழுதாமல் வெற்றி படிகள் என்று எழுதினர்.அந்த வரிசையில் வந்துள்ளபிழையான கட்சித்தலைப்புஇது.
  விஜய்யின் தந்தையிடம் கேட்டிருந்தால் சரியாக எழுதிக்கொடுத்திருப்பார்.
  இவரோ அவர்பேச்சைக்கேட்பதில்லை.

 2. மிகச் சிறப்பான பதிவுகள்! குழந்தைக்கும் புரியும்படி எளிமையான, முழுமையான விளக்கங்கள்!
  இத்தனை கால இணைய வாழ்வில் தங்கள் தளத்தை இப்பொழுதுதான் பார்க்கிறேன்! இத்தனை நாள் தவற விட்டமைக்காக வருந்துகிறேன்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×