ஆங்கிலம் – தமிழ்: ஒலிபெயர்ப்பில் உள்ள சிக்கல்கள்

கேள்வி: ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதும்போது இலங்கையில் ஒரு வகையாகவும் தமிழகத்தில் வேறொரு முறையிலும் எழுதுகிறார்களே!

எடுத்துக்காட்டாக:

Doctor என்பதை இலங்கையில் டொக்டர் என்று எழுதுகிறார்கள். தமிழகத்தில் டாக்டர் என்று எழுதுகிறார்கள். Do எப்படி ‘டா’ ஆக முடியும்? டொக்டர் என்று எழுதுவது தானே சரி?

விடை:

நாம் கற்ற ஆங்கில ஒலிப்பை வைத்து, நாம் ஒலிபெயர்க்கும் முறையே சரியானது என்று நம்புகிறோம். ஆனால் மேலை நாட்டவர் பேசும் ஆங்கிலத்தைத் தமிழில் அப்படியே ஒலிபெயர்க்க முடியாது என்பதே உண்மை.

Doctor என்ற சொல்லில் வரும்போது ‘do’ ஒரு விதமாகவும், do என்ற தனிச்சொல்லில் வரும்போது இன்னொரு விதமாகவும் ஒலிப்பதை உற்று நோக்குங்கள்.

தமிழ் phonemic orthography அதிகம் கொண்ட மொழி. அதாவது ஓர் எழுத்து, தனியாகத் தன்னளவில் எவ்வாறு ஒலிக்கிறதோ சொல்லின் ஒரு பகுதியாக வரும்போதும் அவ்வாறே ஒலிக்கும். (எனவே பெரும்பாலான பொழுதுகளில் எழுதப்படும் எழுத்தின் வழி, ஒலியை உள்வாங்கிக் கொள்ள இயலும்.)

எ+கா: அ என்ற எழுத்து தனியாக எப்படி ஒலிக்குமோ அப்படியே அம்மா என்ற சொல்லின் முதல் எழுத்தாக வரும்போதும் ஒலிக்கும்.

தமிழ்ச்சொல்லில் எழுத்து இணையும் முறை, மாலையில் மலர்களைத் தொடுப்பதை ஒத்தது என்பார் நன்னூலார். மாலையாக மலர்களைத் தொடுத்துக் கட்டிய பிறகு, தனித்தனியாகப் பிரித்தாலும் மலர் அப்படியே கிடைக்கும்.

(‘தங்கம்’ என்ற சொல்லில் வரும் ‘க’ போன்ற எழுத்துகள் விதிவிலக்கு. தனியெழுத்தாகக் ka என்று ஒலித்துவிட்டு, தங்கம் என்ற சொல்லின் இடையே ga என்று ஒலிக்கும். என்றாலும் இவற்றுக்கும் விதிகள் உள. க் – ங், ச் – ஞ் முதலானவை இன எழுத்துகள். எனவே அடுத்தடுத்து வரும்போது மாறி ஒலிக்கும். மஞ்சளில் வரும் ச – ja.)

ஆங்கிலத்தில் தூய்மையான phonemic orthography கிடையாது. குழம்பில் இட்ட உப்பைப்போல, சொல்லுக்குள் வந்துவிட்ட பிறகு முன்னர்க் கொண்டிருந்த முகத்தை எழுத்து இழந்து விடும்; மறைந்து கரைந்து விடும். எ+கா: p, h ஆகிய எழுத்தொலிகள் photograph இல் f ஒலிபோல மாறிவிடும்.

இது மிக வெளிப்படையாகத் தெரிவது. ஆனால் உற்று நோக்கினால் எல்லாச் சொற்களுமே அப்படித்தாம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

Apple – அப்பிள், ஆப்பிள் இரண்டுமே இதன் ஒலிபெயர்ப்பு ஆக மாட்டா. p ஐ அடுத்து i (இ) என்ற உயிரொலி இல்லை. le என்பதைப் பிரித்தெடுத்துப் பார்த்தால் ‘லெ’ என்று ஒலிக்க வேண்டும். ஆனால் சொல்லில் ‘ல்/ள்’ என்று மெய்யொலியாக ஒலிக்க வேண்டும். இப்படி ஏகப்பட்ட குழப்பங்கள்.

இதன் காரணமாகத்தான் உலகெங்கும் ஆங்கிலம் ஆயிரம் வழிகளில் பேசப்படுகிறது.

Commercial என்ற சொல் எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டும் என்பதற்கு கூகுள் தரும் வழிகாட்டலைப் படத்தில் காண்க (ஒலிப்பு: இங்கே செல்க. மேலைத்தேய ஆங்கில ஒலிப்பைப் பல வலைத்தளங்களில் பெறலாம். காணொளிகளில் கேட்கலாம்).

இதன்படிக்கு

குஹ்முஹ்ஷ்ல்

என்றே இந்தச் சொல் ஒலிபெயர்க்கப்பட வேண்டும். உண்மையில் ஆங்கிலத்தில் அச்சொல்லின் தொடக்க ஒலி ‘கு’ இலிருந்து ‘அ’ நோக்கிச் செல்வது.

ஆக, commercial என்பதை கொமர்ஷியல் என்று ஒலிபெயர்ப்பது மூல ஒலிக்கு நியாயம் செய்வதாகாது; காமர்சியல் என்று ஒலி பெயர்ப்பதும் அப்படியே.

என்னைக் கேட்டால், எழுத்துத் தமிழில் குழப்பம் தவிர்க்க வேண்டும் என்றால் இலட்சக்கணக்கான தமிழர் வாழும் இலங்கை வழக்கைப் பின்பற்றுவதை விட, எட்டுக்கோடித் தமிழர் வாழும் தமிழக வழக்கைப் பின்பற்றுவதே நல்லது.

இதனையிட்டு ‘ஐயையோ, நாம் தவறாக ஆங்கிலத்தை ஒலி பெயர்க்கிறோம்’ என்று குற்ற உணர்வு கொள்ளத் தேவையில்லை. காரணம்:

1. மேலே காட்டியதைப் போல, இலங்கையில் பின்பற்றப்படும் வழக்கும் சரியானது கிடையாது.

2. ஏற்கனவே பல முறை இதை எழுதியிருக்கிறேன்: திருவல்லிக்கேணியை Triplicane என்றும் யாழ்ப்பாணத்தை Jaffna என்றும் சிதைக்கும்போது வெள்ளைக்காரனுக்கு வராத குற்ற உணர்வு அவன் மொழியை நாம் சிதைக்கும்போது நமக்கு ஏன் வரவேண்டும். அவனது பொருட்சூறைக்கு முன்னர் இந்த மொழிச்சூறை தூசுக்கும் சமானம் ஆகாது 😃

(மேற்கண்ட கருத்து இலங்கை, தமிழகம், இங்கிலாந்து ஆகிய புலங்களில் கட்டுரையாசிரியருக்குக் கிட்டிய நடைமுறைத் துய்ப்பின் [அனுபவத்தின்] அடிப்படையிலானது. எழுத்தாளர் சரவணன் நடராசா அவர்களது முகநூற் பதிவில் எழுதியது)

2 thoughts on “ஆங்கிலம் – தமிழ்: ஒலிபெயர்ப்பில் உள்ள சிக்கல்கள்”

  1. G MANIVACHAGAM

    மகிழ்ச்சி. அருமையான விளக்கம்.
    கோ மணிவாசகம்
    இ வ ப பணி நிறைவு
    9449823664

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×