தேங்காயும் சிவனும் ஒன்று

மூன்று கண்,

உச்சிக் குடுமி,

நீர்

ஓடு

இறையியல்பு

இவை இருப்பதால்

தேங்காயும் சிவனும் ஒன்று என்று காளமேகப் புலவர் பாணியில் நேற்று ஒரு வெண்பா எழுதியிருந்தேன். தொகாப்பியர் பேரவைப் புலவர் காளியப்பன் ஐயா அவர்களின் வெண்பாவைப் படித்த பிறகு ஏற்பட்ட உந்துணர்வில் – தொடையின்பம் தோன்றப் பாடலாமே என்று எண்ணி – எழுதியது (இறையியல்பு தவிர்ந்த ஏனைய ஒப்புமைகள் அவர் பாட்டிலும் வருகின்றன).

இறையியல்பு – தேங்காயைக் கருதினால் சிதறும் இயல்பு. இறைதல் – சிதறுதல். சிவனைக் கருதினால் இறைவன்.

முக்கண், வார் உச்சி முடி, நீர், இறையியல்பு, ஓடு இவை என்று வந்திருக்கும்.

அவ்வெண்பாவின் ஈற்றடி (கடைசி அடி)

பாங்காயிப் பாவில் பறை

என்று அமைந்திருந்தது.

பறைதல் – சொல்லுதல்.

அதாவாது, ‘பாங்காக இந்தப் பாட்டில் சொல்லு’ என்று பொருள்.

நேற்றுத் தொடரூந்துப் பயணத்தில் ஈற்றடிக்குப் பல மாற்றடிகள் தோன்றின. அவை வருமாறு:


முக்கண்வார் உச்சி முடிநீர் இறையியல்(பு)

ஒக்கவே ஓ(டு)இவை உள்ளதால் – நக்கத்தில்

தேங்காயும் பிச்சைச் சிவனவனும் ஒன்றென்றே

பாங்காயிப் பாவில் பறை

நக்கத்தில் தேங்காய் – உரித்த தேங்காய்

நக்கம் – அம்மணம், நிர்வாணம்

முக்கண்வார் உச்சி முடிநீர் இறையியல்(பு)

ஒக்கவே ஓ(டு)இவை உள்ளதால் – நக்கத்தில்

தேங்காயும் பிச்சைச் சிவனவனும் ஒன்றென்றே

வேங்காயத் தார்க்கே விளம்பு

வேங்காயத்தார் – வேகும் காயத்தார் – மனிதர்

முக்கண்வார் உச்சி முடிநீர் இறையியல்(பு)

ஒக்கவே ஓ(டு)இவை உள்ளதால் – நக்கத்தில்

தேங்காயும் பிச்சைச் சிவனவனும் ஒன்றென்றே

ஓங்காய் தமிழில் உரைத்து

முக்கண்வார் உச்சி முடிநீர் இறையியல்(பு)

ஒக்கவே ஓ(டு)இவை உள்ளதால் – நக்கத்தில்

தேங்காயும் பிச்சைச் சிவனவனும் ஒன்றென்றே

ஆங்காணாய் ஆமாம் அறை

ஆங்காணாய் – ஆகும் காணாய், அறை – தெரிவி

முக்கண்வார் உச்சி முடிநீர் இறையியல்(பு)

ஒக்கவே ஓ(டு)இவை உள்ளதால் – நக்கத்தில்

தேங்காயும் பிச்சைச் சிவனவனும் ஒன்றென்றே

தீங்கானந் தித்திக்கத் தீட்டு

முக்கண்வார் உச்சி முடிநீர் இறையியல்(பு)

ஒக்கவே ஓ(டு)இவை உள்ளதால் – நக்கத்தில்

தேங்காயும் பிச்சைச் சிவனவனும் ஒன்றென்றே

தேங்காத் தமிழில்நீ செப்பு

முக்கண்வார் உச்சி முடிநீர் இறையியல்(பு)

ஒக்கவே ஓ(டு)இவை உள்ளதால் – நக்கத்தில்

தேங்காயும் பிச்சைச் சிவனவனும் ஒன்றென்றே

நீங்கான் பதத்தை நினை

முக்கண்வார் உச்சி முடிநீர் இறையியல்(பு)

ஒக்கவே ஓ(டு)இவை உள்ளதால் – நக்கத்தில்

தேங்காயும் பிச்சைச் சிவனவனும் ஒன்றென்றே

யாங்கூறக் கேட்கும் இகம்

முக்கண்வார் உச்சி முடிநீர் இறையியல்(பு)

ஒக்கவே ஓ(டு)இவை உள்ளதால் – நக்கத்தில்

தேங்காயும் பிச்சைச் சிவனவனும் ஒன்றென்றே

பூங்காற்றே நீயும் புகல்

முக்கண்வார் உச்சி முடிநீர் இறையியல்(பு)

ஒக்கவே ஓ(டு)இவை உள்ளதால் – நக்கத்தில்

தேங்காயும் பிச்சைச் சிவனவனும் ஒன்றென்றே

போங்காற் றிடத்தில் புகல்

புலவர் காளியப்பன் வெண்பா:

இரட்டுற மொழிதல்

சிவனும் தேங்காயும்  14-06-20

குடுமியுடன் நீரிருக்கும் ஓடு மிருக்கும்

வடுவிலா முக்கண் ணிருக்கும் — படுபுகழ்த்

தொல்காப்பி யர்தமிழ்ச் சங்கமத்தில் என்றும்

சிவனோடு தேங்காயும் நேர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×