அமிதசாகரர் 11ம் நூற்றாண்டில் எழுதியதாகக் கருதப்பெறும் யாப்பிலக்கண நூல் ‘யாப்பருங்கலக்காரிகை’.
தமிழ் யாப்பின் தலையாய நூல்களுள் ஒன்று இது. இந்த நூல் அடங்கிய சிதைவுண்ட ஏட்டுச்சுவடியின் (1800-1850 காலப்பகுதிக்குரியது) எண்ணிமப்படியை பிரித்தானிய நூலக வலைத்தளத்தில் இன்று கண்டேன்.
யாழ்ப்பாணம், கோண்டாவிலில் இருந்து மீட்கப்பட்ட ஏட்டுச்சுவடியை நூலக நிறுவனம் (noolaham.org) எண்ணிமப்படுத்தியிருக்கிறது (Digitization). அழியும் ஆபத்துள்ள பனுவல்களைப் பாதுகாப்பதற்கான பிரித்தானிய நூலகத்தின் பெருந்திட்டத்தின் கீழ் 1500க்கும் மேற்பட்ட தமிழ் ஏட்டுச்சுவடிகள் படியெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன.
இசுபானியம் (Spanish), ஆங்கிலம் (English), வங்காளம் (Bengali) ஆகிய மொழிகளுக்கு அடுத்த படியாக – நான்காம் இடத்தில் – அதிக எண்ணிக்கையிலான பனுவல்கள் தமிழிலேயே இங்கு உள்ளன (24, 467).
உலகின் பண்டைய மரபுகள் அனைத்தினதும் அறிவுச் சேகரங்களை மேலைச் சமூகம் தன்வயமாக்கிப் பேணிப் பாதுகாத்துப் பயன் கண்டு வருகிறது.
‘என்று பிறந்தவள் என்ப தறிந்திலர் இங்கெவரும்’ (தமிழ்த்தாய் அந்தாதி) என்று கற்றோர் போற்றும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தொல்குடியோ உணர்வற்று ஆழ் உறக்கத்தில் வீழ்ந்துபோய் உள்ளது.
இழந்து விட்ட முதுசொத்தை மீட்க வேண்டும் என்ற விருப்பு தமிழர்களிடையே கிஞ்சித்தும் இருப்பதாகத் தெரியவில்லை. வன்மையும் வண்மையும் மிக்க தமிழர்கள் மேற்குலகத்திடம் இருக்கும் தமிழர் அறிவுச் செல்வங்களை மீட்டெடுத்துக் கொண்டு வருவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
இம்மாத முடிவில் அனுமதி பெற்று பிரித்தானிய நூலகத்தில் இருக்கும் தமிழ்ப்பனுவல்களைப் பார்வையிடச் செல்லத் திட்டமிட்டிருக்கிறேன். பார்க்கலாம்.
தொடர்புடைய இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
யாப்பருங்கலக் காரிகை எண்ணிமப்படி இணைப்பு: https://eap.bl.uk/archive-file/EAP1260-1-22
அழியும் ஆபத்துள்ள பனுவல்களைப் பாதுகாப்பதற்கான பிரித்தானிய நூலகத்தின் வேலைத்திட்டம்: https://eap.bl.uk/search