ஒரு வானம்பாடிக்கு – To a Skylark – தமிழ் மொழிபெயர்ப்பு (இரா. ஆனந்த்)

பாரதியின் மனம் கவர்ந்த மகாகவிஞன் ஷெல்லி. ஆங்கிலத்தில் ஷெல்லி இயற்றிய ‘To a Skylark’ என்னும் கவிதையைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருமாறு டாக்டர். கணேசன் அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டார். அவரது அன்பு வேண்டுகோளுக்கு இணங்க நான் எழுத முயன்ற மொழிபெயர்ப்பை இங்கே அளிக்க விரும்புகிறேன்.

  • இமயவரம்பன் (இரா. ஆனந்த்)

English Original : https://www.poetryfoundation.org/poems/45146/to-a-skylark

ஒரு வானம்பாடிக்கு – தமிழ் மொழிபெயர்ப்பு

(நிலைமண்டில ஆசிரியப்பா)

1.

கட்டிலாக் களிப்பின் உயிர்ப்பே வாழி!

பறவையென் றுன்னைப் பகர்தற் கரியாய்!

துறக்க வெளியினில் தோன்றினை! கருதி

இசையுறப் பொருத்தா(து) இயல்புறப் படைக்கும்

பண்ணிசை ஒலிபாய் பரவச வெள்ளம்

எண்டிசை நிறைக்க உளமுழு திறைப்பாய்.              

(துறக்கம் = சொர்க்கம்)

2.

எரிதிகழ் மேகத் திரளைப் போலப்

புவித்தலத்(து) எவ்விப் புறப்பட் டெழும்பி

உயர உயர ஓங்கிநின் றுயர்வாய்!

அகல்வான் நீலத்(து) ஓரா ழத்தே

சிறகை விரித்துத் திளைப்புற் றொளிர்வாய்!

பாடும் போதும்விண் ணேறிப் பறப்பாய்;

ஏறும் போதும் இசைப்பாட் டெடுப்பாய்.                               

3.

வீழ்கதிர் இரவியின் பொன்னார் மின்சுடர்

மேகப் பரப்பில் வியனொளி விளைக்க

உருவிலா ஆனந்தத் தொருபுது மலர்வாய் 

விரவிடும் சோதியில் விரைவுற மிதப்பாய்.                                           

4.

வெளிறிள ஊதா வெயிலொளி மாலையும்

நீவிரைந் திடுவழித் தூவணம் இழைத்திடும்; 

விண்மண் டிலத்தில் மின்னுதா ரகைதான்

கிளரொளி வீசும் விளக்கது மங்கி

வைகறைப் போதில் கண்மறை வதுபோல்

விரிபகல் வேளையில் உருக்கரந் திருப்பாய்.

(தூவணம் = தூ + வண்ணம் = தூய வண்ணம்;

தாரகை = விண்மீன்; கரந்து = மறைந்து)                    

5.

விழிகளுக் கெட்டா அவ்வெள்ளிக் கோளம்

அரியொளிக் கணைகள் அனுப்புதல் போல

ஒளிர்வான் உச்சியில் உருமறைந் தாலும்நீ

உயர்வற உயர்ந்தாங் கிருப்பதை உணர்த்தும்

ஆனந்தக் கீச்சொலித் தேனிசை கேட்பேன்.

(அரி = கூர்மையான)                                      

6.

கனவிருட் டிரவிலொர் தனிமுகிற் கப்பால்

தண்கதிர் பொழியும் திங்களின் தாரை

பரவெளி பொங்க ஒளிபடைத் தாற்போல்

வியனுல கெங்கும் காற்று வெளியிலும்

ஒலிமிக எழுப்பி உன்குரல் முழங்கும்.                                                    

7.

எத்தகு இயல்பினாய் எனயாம் அறிகிலம்;

எத்தகு பொருளோ(டு) ஒத்ததுன் தன்மை?

வானவில் தோற்றும் நீர்நிறை மேகத்(து)

ஆகத்(து) இழிந்த மாணொளி அதனினும்

நின்திருப் பொழியும் இன்னிசை மழைதான்

தன்னிக ரில்லா மின்னொளி உடைத்தாம்.                

(ஆகம் = நெஞ்சு; இழிந்த = பெய்த;

மாணொளி = பேரொளி;

திரு = திருவுருவிலிருந்து)               

8.

இதுவரை கருதா ஏக்கமும் நெஞ்சுக்(கு)

இதமுறு நம்பிக் கைகளும் உணர்ந்திவ்

விரிகடல் உலகம் பரிவுற் றிலகச்

சிந்தனை என்னும் ஒண்திரைப் பின்னால்

கரந்து நிற்கும் கவிஞனைப் போல

அருள்மிகு பாடல்தன் னிச்சையின் அளிப்பாய்.      

(ஒண்திரை = ஒளிமிகுந்த திரை)      

9.

அரண்மனை மாடத் தறையின் தனிமையில்

ஊர்துயி லுற்ற காரிருட் கங்குலில்

அன்புறு நெஞ்சின்நோய் ஆற்றுதற் பொருட்டுத்

தன்பெருங் காதலின் தனிச்சுவை ததும்ப

இன்னிசைப் பாடல் யாழுற இசைக்கும்

செல்வக் குலத்திளந் தெரிவை போன்றனை:

(கங்குல் = இரவு; தெரிவை = இளம்பெண்)                             

10.

தோய்பனி சூழ்ந்த தாழிடம் தன்னில்

மறைக்கும் திரையாம் மலர்புல் இவற்றிடை

உருவெளிக் காட்டா(து) இருள்இரிந் திடவே

ஒருகேழ் ஒளியைக் காற்றொடு தெறித்துப்

பொன்னுடல் மினுங்கும் மின்மினி போன்றனை: 

(தாழிடம் = தாழ்ந்த இடம் / பள்ளத் தாக்கு;

இரிந்திட = நீங்கிட; கேழ் = நிறம்/வண்ணம்)           

11.

கனமிகு சிறகின் கடுவளிப் படைகள்

விரைமலர் திருடிட வரும்போ தவைமிகு

மணவீச்(சு) அதனால் மயங்கி மருளத்தன்

பசுந்தழை மிடைந்த படலத் துற்ற

பொலிவார் நலத்தின் ரோஜா போன்றனை:                                           

12.

மினுங்கிடு பசும்புல் நனைந்திடப் பொழியும்

வசந்த கால மழைமுழங்(கு) ஓசையும்

அம்மழை கலைக்கும் செம்மலர்த் துயிலும்

என்றிவை போன்ற இன்பத் தேறலின்

புத்தெழில் மிகுந்த அத்தனை அழகையும்

விஞ்சிட இனிக்கும் நின்செய கீதமே!                                                       

13.

அறிவரும் தோற்றத் தணங்கே என்கோ!

சிறகினை விரிக்கும் பறவாய் என்கோ!

இனிக்கும் உன்றனெண் ணங்கள் இன்னவென்(று)

எந்தம் சிந்தை கற்றிடக் காட்டாய்!

அன்பை அல்லது மதுவை வழுத்திடும்

இன்பக் களிப்பாங் கிரைத்திட் டெழுப்பும்

அருட்செறி வார்ந்த திருவிசை வெள்ளம்

இதுபோல் எங்கும் யான்கேட் டிலனே!                                   

14.

மங்கலம் பொங்கும் மணவாழ்த் திசையும்

இகல்கடந் தோரைப் புகழொலி முழக்கமும்

மிகுமன வேட்கை தணிக்காத் தன்மையால்

நின்னிசை நேரவை வெறுங்கொக் கரிப்பே!

(இகல்கடந்தோர் = பகைவென்றோர்)                                      

15.

நின்றன் இன்பச் சுரத்தைச் சுரந்திடும்

இன்னிசை ஊற்றாம் பொருள்தாம் எவையோ?

எவ்வயல் வெளிகளோ? எவ்வலை? எம்மலை?

வானொடு நிலவெளி வடிவமெவ் வெவையோ?

இணங்குமுன் இனத்தின் காதலெவ் வகையோ?

மிகுவலி மறக்கும் வெள்ளைமை யாதோ?                                            

16.

தெளிவொடு குவிந்தநின் களிமிகு மலர்வின்

தூமனம் என்றும் சோர்வுறல் அரிதாம்

சலிப்பின் நிழலுமுன் றன்னையண் டாதுநீ

அன்புற் றிருப்பாய், ஆயினும் காதலின்

துயருறு தேக்கத் துவள்வொன்றும் அறியாய்.                                        

17.

மறித்திடு தேகத்து மனிதரோம் காணும்

கனவினைக் காட்டிலும் தெளிவிற் சிறந்து

விழிப்புறு நிலையிலும் முழுத்துயில் வேளையும்

உண்மையும் ஆழமும் உள்மிகும் உணர்வுடன்

இறப்பினைக் குறித்துக் கருத்தொடு நினைப்பாய்

அத்தகு நினைப்பின் ஆற்றலால் அன்றி

இத்தகைத் தான இசையோட் டத்தைப்

பளிங்கின் தெளிவாய் எப்படிப் படைப்பாய்?

18.

முன்னம் நிகழ்ந்ததை உன்னி வெதும்புவோம்

பின்னாள் எண்ணிப் பேதலித் துழல்வோம்

இல்லாப் பொருளைஇச் சித்(து)ஏக் குறுவோம்

நெஞ்சுற எழுந்த எம்சிரிப் பொலியிலும்

துஞ்சுறு வலியின் சுமைமிகக் கனத்திடும்

தித்தித் திருக்குமெம் தீஞ்சுவைப் பாட்டிலும்

சித்தத் துறுபெருஞ் சோகம் தொனித்திடும்.                                            

19.

பரிவறு வெறுப்பு பெருமிதம் அச்சமென்

றிருதயத் துறுமிவை இகழ்ந்திட் டுதறினும்

ஒருதுளி கண்ணீர் உதிரா வணம்யாம்

இருநிலம் தன்னில் பிறப்பெடுத் தாலும்

இன்புறும் நின்கேழ் ஆகும்ஆ(று) அறிகிலம்.          

(நின்கேழ் = உனக்கு நிகராக)         

20.

இருநிலம் தன்னை எள்ளுவோய்! நின்றன்

கலைத்திறன்: புலவர்தம் கவிநலம் தொலைத்திடும்;

இன்பச் சுரத்தொலி யாவையும் வென்றிடும்;

பன்னூல் பொதிந்த பொன்னிதிக் குவையாம்

செப்பரும் பொருளினும் மிகுசிறப் புற்றிடும்.                                      

21.

மனத்துற அறிந்தநின் மகிழ்விலொர் பாதியை

எனக்குப் பயிற்றுவித் தேற்றம்நீ கொடுப்பாய்!

இத்தகு இயைபின் வெறிமிக் கிசைப்புனல்

நித்தமும் நிறைந்தென் நாவழிந் தோடினால்

இசைந்திவ் வுலகம் எனைச்செவி கொள்ளும்நின்

இசைகேட் டின்றுநான் இன்புறல் போலவே.                                        

தமிழாக்கம்:

இரா. ஆனந்த்

(இத்தமிழாக்கம் செய்வதற்கு எனக்கு ஊக்கம் அளித்த டாக்டர் கணேசன் அவர்களுக்கு மிக்க நன்றி)

மதுரன் தமிழவேள் குறிப்பு:

From the earth thou springest
Like a cloud of fire

என்று ஷெல்லி பாடுவது ஷெல்லிதாசனான பாரதியின் அக்கினிக்குஞ்சினை எனக்கு நினைவு படுத்துகிறது. (‘எரிதிகழ் மேகத் திரளைப் போல.. ஓங்கிநின் றுயர்வாய்’ என்று தமிழாக்குகிறார் நம் கவிஞர்.)

பரம யோகியும் பாரதியின் நண்பரும் கவிதையின் சொல் மந்திரமாகலாம் என்பதை பாரதிக்கு உணர்த்தியவர் என்று நான் நம்புபவருமான ஸ்ரீ அரவிந்தர், பாரதி மறைந்து 20 ஆண்டுகள் கழித்து Bird of Fire என்றொரு கவிதை எழுதினார்; யாரேனும் தமிழாக்கியிருக்கிறார்களா தெரியவில்லை:

மேலைப்புலவர்களையும் மெய்யியல் மேதைகளையும் ஐயந் திரிபறக் கற்றவர் அவர்.

(சொல் எப்படி மந்திரமாகிறது என்பது பற்றி Future poetryஇல் விரிவாக எழுதுகிறார் அரவிந்தர்; தேவாரப் பாடல்களை மந்திரங்கள் என்று அழைப்பது சரியா என்று ஒருமுறை நிரஞ்சன் பாரதி வினவியிருந்தார். இதுபற்றி வேளை வாய்க்கும்போது விரிவாக எழுத எண்ணம். ‘மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம் – பாரதி. ‘நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப’ – தொல்காப்பியர்)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×