பனிநிலங்களில் தமிழ் வயல் உழுதல்: மேலை நாடுகளில் தமிழ்க்கல்வி

இங்கே இங்கிலாந்திலே இணையவழியில் என்னிடம் தமிழ் படிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயார் நேற்று வகுப்பு முடிந்த பின் அனுப்பி வைத்த புலனச் செய்தி படத்திலே உள்ளது. பிள்ளைகள் மட்டுமல்ல; அவ்வம்மையாரும் இங்கே பிறந்து வளர்ந்தவர் தான். தமிழரென்றபோதும் தமிழ் பேச வராது.

“மற்றுமோர் அருமையான பாடம். நன்றி. பதினெட்டு வயதில் இருந்து தமிழ் பேச முயன்று வருகிறேன்.. … முதன்முறையாக நம்பிக்கை வந்திருக்கிறது”

என்பது ஆங்கிலத்தில் அவர் அனுப்பி வைத்த செய்தியின் சாரம்.

பாடங்கள் நடக்கும்போது கூட இருந்துகொள்வார். அவர் தமிழ் கற்றுக்கொள்வதற்கும் அது உதவுகிறது, பிள்ளைகள் ஊக்கத்துடன் பாடங்களில் கவனம் செலுத்துவதற்கும் உந்துதலாக அமைகிறது.

வெளிநாடுகளில் பிறந்த தமது பிள்ளைகளின் தமிழ்க்கல்வியில் அக்கறை செலுத்தும் இத்தகைய பெற்றோர் மெச்சத்தக்கோர். அவர் மகிழ்ச்சியுடன் செலுத்தியிருந்த கொடுப்பனவை விட, நன்றி கூறி அனுப்பிய இந்தச் செய்திதான் எனக்கு அதிக உவகை தந்தது.

மேலை நாடுகளில் பிறந்து வளரும் குழந்தைகளுக்குத் தமிழ் சொல்லித் தருவது அலாதியானது.

ஏரணச்செறிவு (logical prowess) மிக்க கேள்விகள் வழியாக உங்கள் சிந்தனையைத் தொடர்ந்து தூண்டிக்கொண்டே இருப்பார்கள். சிறுவயதில் இருந்து அச்சமின்றிச் சிந்திக்கும்படி இங்குள்ள கல்விமுறை அவர்களைப் பயிற்றுகிறது.

நான் பாடம் சொல்லித்தரும் பிள்ளைகள் அனைவரும் ஆங்கிலத்தை முதன்மொழியாகக் கொண்டவர்கள். பலர் வீட்டில் தமிழில் உரையாடுவதே கிடையாது.

தமிழ் கற்பதற்குக் கடினமான மொழி அன்று’ என்று அவர்கள் உணரும் வகையில் பாடம் சொல்லித்தருவதற்கு நான் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது.

ஆங்கிலம் வழியாகத் தமிழ் கற்பிப்பதில் உள்ள முதன்மையான இடர்பாடுகளாக நான் கண்டறிந்தவை:

==

1. தொடரியல் அமைப்பில் உள்ள வேறுபாடு (syntactic difference):

ஆங்கிலத் தொடர்கள் பெரும்பாலும் Subject-Verb-Object (SVO) என்ற அமைப்பில் வரும் (எழுவாய் – பயனிலை – செயப்படுபொருள்)

தமிழ்த்தொடர்கள் Subject – Object – Verb என்ற அமைப்பைக் கொண்டுள்ளன;

காட்டு:

He ate rice

அவன் சோறு உண்டான்

==

2. இடைச்சொற்கள் தமிழில் பெயரையும் வினையையும் அடுத்தும் (postpositions) அவற்றுடன் ஒட்டியும் (Agglutinative Nature) வரும். ஆங்கிலத்தில் அவற்றுக்கு முன்னால் (prepositions) தனியாக வரும்.

காட்டு:

அவ்விடத்துக்குப் போனேன் – ‘கு’ உருபு ’இடம்’ என்பதை அடுத்து அதனோடு ஒட்டி வந்தது.

I went to that place – ‘to’ தனியாக placeக்கு முன் வந்தது.

==

3.பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் உடன்படும் முறை (Subject-Verb Agreement)

இடம் (தன்மை, முன்னிலை, படர்க்கை), காலம், பால் (ஆணா பெண்ணா ஒன்றா பலவா), திணை (உயர் திணை, அஃறிணை) முதலானவற்றை இருமொழிகளும் வெவ்வேறு வகையில் உணர்த்துகின்றன.

காட்டு:

She came – she என்ற பெயர்ச்சொல் மட்டுமே பாலினை (Gender) உணர்த்துகிறது

அவள் வந்தாள் – பெயர், வினை இரண்டினது விகுதிகளும் பாலினை (அவ’ள்’, வந்தா’ள்’) உணர்த்துகின்றன.

==

4. வினாக்கள் அமையும் முறை; ஆங்கிலம் துணைவினைச் சொற்களைப் (auxiliary verbs: have, do, does, did etc.) பயன்படுத்துகிறது. தமிழில் வினா எழுத்துகள் முதன்மை பெறுகின்றன (ஆ, ஓ, ஏ, யா முதலானவை)

ஆங்கிலத்தில் கல்வி பயிலும் தமது பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லித்தரும் பெற்றோர் இவற்றை மனத்தில் இருத்துதல் நலம்.

(மார்ச் 1, 2024 அன்று முக நூலில் எழுதிய பதிவு)


மதுரன் தமிழவேளின் தமிழ் வகுப்புகளில் இணைந்து கொள்ள: புலனம் வழியாகத் தொடர்பு கொள்க (Click here)


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×